‘எரிவாயு சிலிண்டர் எடுத்துச் சென்றபோது கசிவு’... ‘வெடித்துச் சிதறியதால் ஓசூர் அருகே நடந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 19, 2020 05:43 PM

கிருஷ்ணகிரி அருகே ஓசூரில் மிகப்பெரிய எரிவாயு சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டதால் அதை ஏற்றிச் சென்ற மினி லாரி தீப்பிடித்து சுற்றுவட்டாரத்தில் இருந்த கடைகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாகின.

Krishnagiri Fire accident due to Gas Cylinder explosion

ஓசூரை அடுத்த அலசநத்தம் பகுதியில் உள்ள தனியார் கேஸ் குடோனில் இருந்து, தொழிற்சாலை பயன்பாட்டுக்கான 450 கிலோ எடையுள்ள ஒரு பெரிய கேஸ் சிலிண்டரை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டதில் சிலிண்டரில் தீ பிடித்தது. இதில் சிலிண்டர் வெடித்து தீ பரவியதில் ஆட்டோ, இருசக்கர வாகனம் என 10-க்கும்  மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின.

ஓட்டுநர் மினி லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கி தப்பியநிலையில், அருகில் இருந்த கடைகள் மற்றும் வாகனங்களுக்கு பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தபோதிலும் மருந்து கடை, எலெக்ட்ரிக்கல் கடை என 12 கடைகளும் தீயால் உருக்குலைந்தது. இந்த விபத்தால் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.