நெல்லை கொலை வழக்கு : மகன் கைது, தாய் தலைமறைவு.. ‘வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா..?’ விசாரணை தீவிரம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 01, 2019 01:51 PM

திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உட்பட மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Son of DMK leader arrested for murder of ex mayor two others

திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தக் கொலையில் குற்றவாளியைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அரசியல் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் தனக்கு இதில் தொடர்பு இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உமாமகேஸ்வரியின் வீட்டின் அருகிலுள்ள ஹோட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் சம்பவத்தன்று வீட்டருகே கார் ஒன்று 2 முறை சென்றதும், ஒரு நபர் மஞ்சள் பையுடன் அந்த வழியாக நடந்து செல்வதும் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீஸார் அந்த கார் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுடையது என்பதைக் கண்டறிந்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திலிருந்த கைரேகைகளும் கார்த்திகேயனின் கைரேகைகளுடன் ஒத்துப்போயுள்ளதால் அவர்தான் முக்கிய குற்றவாளி என போலீஸார் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து தனிப்படை போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உமாமகேஸ்வரியால் தான் தன் தாய் சீனியம்மாள் அரசியலில் முன்னுக்கு வர முடியவில்லை என்ற ஆத்திரத்திலேயே கொலை செய்ததாக கார்த்திகேயன் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் ரத்தக்கறை படிந்த ஆடைகள், தொப்பி, செருப்பு ஆகியவற்றை கக்கன் நகர் பகுதியில் தீயிட்டு எரித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்கு பயன்படுத்திய கத்தியும், சம்வத்தன்று கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் சீனியம்மாளின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து உமாமகேஸ்வரியின் வீட்டுக்கு கார்த்திகேயனை அழைத்து சென்ற போலீஸார் சம்வத்தன்று நடந்ததை அவரை நடித்துக் காட்ட சொல்லி வீடியோ பதிவு செய்துள்ளனர். கொலைக்கு தூண்டுகோலாக இருந்தவர்களையும் ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கில் சேர்க்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். கொலையில் அரசியல் பின்னணி இருப்பதால் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் கார்த்திகேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள கார்த்திகேயனின் தாய் சீனியம்மளை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags : #TIRUNELVELI #EXMAYOR #BRUTALMURDER