வேலூரில் பயங்கரம்... 'காதலை' கண்டித்ததால் பெற்ற தாயை... 'லாரியில்' தள்ளிவிட்டு கொலை செய்த மகன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூர் அருகே காதலை கண்டித்ததால் பெற்ற தாயை லாரியில் தள்ளிவிட்டு சொந்த மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்தவர் கலைவாணி(42) இவருக்கு விக்ரம்(22) என்ற மகனும், நர்மதா என்ற மகளும் உள்ளனர். 5 வருடங்களுக்கு முன் இவரது கணவர் இறந்து விட்டார். இதனால் கலைவாணி அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை செய்து வந்தார். இதற்கிடையில் குடிப்பழக்கம் காரணமாக விக்ரமுக்கும், கலைவாணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
மேலும் விக்ரம் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை கலைவாணி கண்டித்து இருக்கிறார். பெண் வீட்டாருக்கும், கலைவாணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த விக்ரம் நேற்று முன்தினம் கலைவாணியுடன் சண்டை போட்டு அவரை அடித்து உதைத்திருக்கிறார். இதனால் கலைவாணி வீட்டைவிட்டு வெளியே வந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓடி இருக்கிறார்.
பின்னாடியே ஓடிய விக்ரம் கண்டெய்னர் லாரி ஒன்றில் கலைவாணியை பிடித்து தள்ள, அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கலைவாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விக்ரமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
