குளிக்க போன 'பசங்கள' காணோமே... தேடிச்சென்ற தாய்க்கு 'அடுத்தடுத்து' காத்திருந்த அதிர்ச்சி... 'நடுங்க' வைத்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 23, 2020 01:13 PM

தூத்துக்குடியில் குளிக்க சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த கொடூரம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

Two Boys murder Near Vilathikulam, Police Investigate

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜோதி முத்து. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியான உஷாராணிக்கு சீமான் அல்போன்ஸ் மைக்கேல்(14) என்ற மகனும், 2-வது மனைவி மகாலட்சுமிக்கு எட்வின் ஜோசப்(9) என்ற மகனும் உள்ளனர். இதில் சீமான் 7-ம் வகுப்பும், எட்வின் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சிறுவர்கள் இருவரும் உறவினர் ஒருவருடன் அந்த பகுதியில் உள்ள கிணறு ஒன்றிற்கு குளிக்க சென்றனர். சிறிது நேரத்தில் சிறுவர்களின் உறவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும், சிறுவர்கள் மட்டும் குளித்துக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. வெகுநேரம் ஆகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கிணற்றுக்கு சென்று பார்த்து இருக்கின்றனர்.

அப்போது கிணற்றுக்குள் செருப்பு மிதந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சிறுவர்கள் கிணற்றுக்குள் மூழ்கி இருக்கலாம் என்று கருதினர். இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி தேடியதில் எட்வின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சீமான் உடல் கிடைக்கவில்லை.

தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு சீமான் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதையடுத்து இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில்  2 சிறுவர்களையும் குளிக்க கிணற்றுக்கு அழைத்து சென்றது சிறுவர்களின் சித்தப்பாவான ரத்தினராஜ் (44) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் சிறுவர்கள் இருவரையும் கிணற்றில் தள்ளி ரத்தினராஜ் கொன்றது தெரிய வந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக அண்ணன் மகன்களை கொன்றதாக ரத்தினராஜ் போலீசிடம் தெரிவித்தார். இதையடுத்து ரத்தினராஜை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.