என்னுடைய அந்த 'பழக்கம்' தான் காரணம்... 'தற்கொலை' செய்துகொண்ட இளம்தம்பதி... 'உருக்கமான' கடிதம் சிக்கியது!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 22, 2020 09:03 PM

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் திருமணமான 8 மாதத்தில் இளம்தம்பதி நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்து இருக்கிறது.

Newly married Couple Suicide Near Panruti, Police Investigate

தற்கொலை செய்துகொண்ட மணிகண்டன்(29) கோயில் கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டும் வேலை செய்து வந்தார். வர்ணம் தீட்டுவது தொடர்பாக சிவராமன் என்பவரது வீட்டிற்கு மணிகண்டன் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது சிவராமனின் மகள் மகேஸ்வரி(22) என்பவருக்கும் மணிகண்டனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக உருமாறியுள்ளது. இருவர் வீட்டிலும் இவர்கள் காதலுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணத்திற்கு பின் தம்பதியர் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. நாளடைவில் கணவன்-மனைவி இருவருக்கும் இதனால் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று மணிகண்டன் குடித்து விட்டு வந்துள்ளார். இதனால் மணிகண்டன்-மகேஸ்வரி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மணிகண்டன் சாப்பிட்டு உறங்கி விட்டார். ஆனால் மகேஸ்வரி உறங்கவில்லை. மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நள்ளிரவில் போதை தெளிந்து எழுந்த மணிகண்டன் மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தொடர்ந்து மனைவியின் சடலத்தை கீழே இறக்கிய அவர் அவர் தூக்குப்போட்ட அதே துப்பட்டாவில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை விடிந்து வெகுநேரம் ஆகியும் மகேஸ்வரி வீட்டின் கதவு திறக்கவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர்  கதவை திறந்து பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் பிணமாக கிடந்தனர். தொடர்ந்து போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கடிதம் ஒன்று சிக்கியது அதில், ''எனது குடிப்பழக்கத்தால் மனைவியையும், அவரது வயிற்றில் வளர்ந்த சிசுவையும் பறிகொடுத்து விட்டேன். அவர் இல்லாத இந்த உலகத்தில் நானும் வாழ முடியாது. எனவே என் மனைவி சென்ற இடத்திற்கே நானும் செல்கிறேன். அம்மா, என்னை மன்னித்து விடுங்கள். மாமா, எனது அம்மாவை கவனித்துக் கொள்ளுங்கள்,'' என்று மணிகண்டன் எழுதியிருந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.