ஒண்ணு இல்ல 'மொத்தம்' அஞ்சு... போலீசுக்கே 'ஷாக்' கொடுத்த... புதுக்கோட்டை வாலிபர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சியில் காவலாளியின் தலையில் கல்லைப்போட்டு பணம், செல்போனை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த தனியார் காவலாளியின் தலையில் கல்லைப்போட்டு அவரது பணம், செல்போனை வாலிபர் ஒருவர் திருடிச்செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. உயிருக்கு போராடிய காவலாளியை அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள் காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து நான்கு முறை பெரிய பாறாங்கல்லை அந்த வாலிபர், காவலாளியின் தலையில் தூக்கிப்போடும் காட்சிகளை பார்த்து பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே வீடியோவை பார்த்து அதிர்ந்துபோன போலீசார் அந்த வாலிபரின் உருவத்தை வைத்து அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவரது பெயர் ராஜ்குமார்(25) என்பதும் அவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பதுங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் கறம்பக்குடி சென்று அந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சேலம், கரூரில் நடைபெற்ற 5 கொலைகளில் அவருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. தற்போது போலீசார் தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வாருகின்றனர்.