‘யூடியூப்’ வீடியோ பாத்து... ‘ஆன்லைன்ல’ இதுக்காகவே ‘ஆர்டர்’ பண்ணி வாங்கினது... ‘1000 ஆண்டுகள்’ பழமையான கோயிலில் நடந்த ‘பரபரப்பு’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Mar 05, 2020 10:14 PM

கும்பகோணம் அருகே கோயில் ஒன்றிற்குள் திடீரென நுழைந்து புதையல் எடுக்க பள்ளம் தோண்டிய 2 பேரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Kumbakonam 2 Arrested For Digging Temple Land To Find Treasure

கும்பகோணத்தை அடுத்த பாகவதபுரத்தில் 1000 ஆண்டுகள் பழைமையான காக்லேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் உள்ளே புகுந்த 2 நபர்கள் திடீரென கோயில் வளாகத்தில் நவீன கருவிகளைக் கொண்டு பள்ளம் தோண்டி, ரேடார் கருவி மூலம் பூமிக்கடியில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கோயில் குருக்கள் மற்றும் அப்பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து கோயிலுக்கு சென்ற போலீஸார் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் சோழபுரம் உப்புகாரத் தெருவை சேர்ந்த இப்னுகாலிப், பீர்முகமது என்பது தெரியவந்துள்ளது. போலீஸ் விசாரணையில் அவர்கள், “மிகவும் பழைமையான கோயில்களில் பூமிக்கடியில் தங்கம், வைரம், பழங்கால காசுகள் போன்ற புதையல் இருக்கும் எனக் கேள்விப்பட்டோம். இதைப் பற்றித் தெரிந்துகொள்ள யூடியூபிலும் நிறைய வீடியோக்களைப் பார்த்துள்ளோம்.

அதன்பிறகு நாங்களும் பழைமையான கோயிலில் புதையல் எடுக்கலாம் எனத் திட்டமிட்டோம். இதற்காகவே ஆன்லைன் ஷாப்பிங்கில் தரைப் பகுதிக்கு அடியில் என்ன இருக்கிறது என ஆய்வு செய்ய உதவும் ரேடார் கருவியை புக் செய்து ஹைதராபாத்திலிருந்து வரவழைத்தோம். பின்னர் சில நாட்களுக்கு காலை நேரத்தில் கோயிலை நோட்டமிட்டுவிட்டு, நேற்று இரவு புதையல் எடுப்பதற்கான பணியைத் தொடங்கினோம்” எனக் கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து ரேடார் கருவி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றிய போலீசார், உண்மையிலேயே அவர்கள் கோயில் வளாகத்தில் தங்கப் புதையல்தான் தேடினார்களா அல்லது வேறு ஏதாவது செய்யத் திட்டமிட்டார்களா என விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #POLICE #KUMBAKONAM #TEMPLE #TREASURE #GOLD #YOUTUBE #ONLINE #SHOPPING