நின்றுகொண்டிருந்த பேருந்தில்... ‘ரூ 3 கோடி’ நகைகள் கொள்ளை... ‘திருடர்கள்’ வழியிலேயே சென்று... ‘ஸ்கெட்ச்’ போட்டு ‘மீட்ட’ போலீசார்...
முகப்பு > செய்திகள் > இந்தியாசங்ககிரி அருகே கடந்த மாதம் திருடிச் செல்லப்பட்ட ரூ 3 கோடி மதிப்பிலான நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

தெலுங்கானாவைச் சேர்ந்த நகை வியாபாரியான கௌதம் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளோடு கோவை நோக்கி சொகுசுப் பேருந்து ஒன்றில் சென்றுள்ளார். சங்ககிரி அருகே பேருந்து நின்றபோது, பயணிகள் யாரும் பேருந்தில் இல்லாததைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் நகைகள் இருந்த பையை திருடிச் சென்றுள்ளனர். இந்தக் காட்சிகள் அந்தப் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்துள்ளது.
இதையடுத்து சேலம் மாவட்ட கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு இதுகுறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணையில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முஸ்தபா, அக்தர், முனீர், அகமதுகான், அஜய் ரத்தோர் ஆகியோர்தான் நகைகளைத் திருடியுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர்களை மடக்கிப் பிடிக்க திட்டமிட்ட போலீசார், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நபர் மூலம் நகைகளை வாங்க விரும்புவதாகக் கூறி 5 பேரையும் தருமபுரி வரவழைத்துள்ளனர். பின்னர் திட்டப்படியே தருமபுரி வந்த திருடர்களிடமிருந்து நகைகளை அவர்கள் மீட்டுள்ளனர். ஆனால் திருடர்களை மடக்கிக் கைது செய்ய முயற்சித்தபோது, அவர்கள் தப்பியோடிவிட்டதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
