'ஆண்பாவம் பட பாணியில்'...'டெலிவரி பாய்களிடம் ஆட்டைய போட்ட'...'சாப்பாட்டு கொள்ளையன்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Sep 17, 2019 12:00 PM
ஆண்பாவம் பட பாணியில், டெலிவரி பாய்களிடம் நூதன முறையில் கொள்ளை அடித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையை அடுத்த அக்கரை பகுதியை சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் ஆயிரத்து நூறு ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து ஆர்டர் செய்த உணவை டெலிவரி செய்யும் சஞ்சய் என்ற இளைஞர், ஆர்டரில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு கொண்டு சென்றுள்ளார். அந்த முகவரியில் இருந்த நபரிடம் உணவை கொடுத்துவிட்டு பணத்தை கேட்டுள்ளார். அப்போது அந்த நபர் பக்கத்து தெருவில் இருந்த வீட்டை காட்டி, அது தன்னுடைய வீடு தான் என்றும் அங்கு சென்று பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
அதோடு தனது மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டதாகவும், எனவே உங்களது போனை கொடுத்தால் அந்த வீட்டில் இருக்கும் தனது உறவினர்களிடம் பேசி பணம் கொடுக்க சொல்வதாகவும் கூறியுள்ளார். மேலும் பணத்தை பெற்றுக்கொண்டு வரும்போது போனை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய டெலிவரி பாய் சஞ்சய், தனது மொபைல் போனை அந்த நபரிடம் கொடுத்து விட்டு அவர் சொன்ன வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் நாங்கள் உணவு எதுவும் ஆர்டர் செய்யவில்லை என கூறியுள்ளார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சய், அந்த நபர் இருந்த இடத்திற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது அந்த நபர் செல்போன் மற்றும் டெலிவரி செய்த உணவுடன் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே உத்தண்டி அருகே உள்ள ரேவதி உணவகத்தில் இரண்டாயிரத்து நூறு ரூபாய்க்கு அப்பன் ராஜ்குமார் என்பவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதனை சுப்பையா என்பவர் எடுத்துக்கொண்டு ஆர்டரில் குறிப்பிடப்பட்டியிருந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு காத்திருந்த அப்பன் ராஜ்குமார் உணவை பெற்றுக்கொண்டு, அருகில் இருக்கும் பெரியார் தெருவில் அமைந்திருக்கும் கெஸ்ட் ஹவுசில் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். மேலும் அவசரமாக பேச வேண்டும் எனவே உங்கள் செல்போனை கொடுங்கள் என கேட்டுள்ளார். இதையடுத்து தனது செல்போனை அப்பன் ராஜ்குமாரிடம் கொடுத்த டெலிவரி பாய், அவர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று உணவை கொடுத்துள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் தாங்கள் உணவு எதுவும் ஆர்டர் செய்யவில்லை என கூற, குழப்பத்தில் மீண்டும் பழைய இடத்திற்கு வந்து பார்த்துள்ளார்.
அப்போது தான் அப்பன் ராஜ்குமார் தனது செல்போனுடன் மாயமானது அவருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பையா, தான் ஏமாற்றப்பட்டது குறித்து கானத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆன்லைனில் ஆர்டர் செய்து செல்போனை கொள்ளையடிக்கும் நபரை பிடிக்க காவல்துறையினர் திட்டம் போட்டார்கள். அதன் அடிப்படையில் அந்த நபர் வந்து சென்ற இடங்களில் இருக்கும் சிசிடிவி கேமராகளை ஆய்வு செய்த காவல்துறையினர், செல்போன் கொள்ளையன் ராஜ்குமாரை கைது செய்தனர்.
ராஜ்குமாரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஒரு வருடமாக இதுபோன்று செல்போனை திருடி விற்று காசு பார்த்தது தெரியவந்தது.