'கூவத்தில்' நைட்டியுடன் மிதந்த இளம் பெண்ணின் சடலம்'...கொலையா?...சென்னையில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Sep 11, 2019 03:54 PM
சிந்தாதிரிப்பேட்டை செல்லும் வழியில் கூவம் ஆற்றின் பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை செல்லும் வழியில் கூவத்துக்கு நடுவே உள்ள பாலம் அருகே இன்று காலை 9 மணி அளவில் சுமார் 22 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்கள். இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பாலத்தில் இருந்து ஏணி மூலமாக கயிறு கட்டி இறங்கி பெண்ணின் உடலை மேலே தூக்கினர். அந்த பெண் பச்சை நிறத்தில் நைட்டி அணிந்திருந்தார். சிகப்பு நிற தோற்றத்தில் காணப்பட்ட அந்த பெண், தாலி போன்று அணிகலன் ஒன்றையும் அணிந்திருந்தார். இந்த அடையாளங்களை வைத்து பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதனிடையே அந்த பெண் நைட்டி அணிந்திருந்ததால், அவர் நிச்சயம் சென்னையை சேர்ந்தவராகவே இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த பெண் கூவம் கரையோரத்தில் உள்ள பகுதியில் கூட வசித்து வருபவராக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அந்த பெண் கொலை செய்யப்பட்டு கூவத்தில் வீசப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள இளம் பெண்ணின் உடல் இன்று பிரேதபரிசோதனை செய்யப்படுகிறது. இதன் பிறகே அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்பதால் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கிறார்கள்.
சென்னையில் இன்று காலையில் காணாமல் போன இளம்பெண்களின் பட்டியலை மற்ற போலீஸ் நிலையங்களில் தொடர்பு கொண்டு கேட்டு வரும் எழும்பூர் காவல்துறையினர்,பிணமாக கிடந்த பெண் யார் என்பது குறித்தும், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளார்கள்.