'வசதியான வீட்டு பொண்ணு'...'எப்படி எல்லாம் பிளான் போட்டு வச்சிருந்தேன்'...போதை மாமாவால் சிக்கிய இளைஞர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 14, 2019 02:09 PM

அரசு மருத்துவர் என பொய் சொல்லி, வசதியான வீட்டுப் பெண்ணை திருமணம் செய்ய இருந்த இளைஞர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது சிக்கிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

Man cheated bride family in chennai arrested

வில்லிவாக்கம் வெங்கடேசன் நகரில் வசித்து வந்தவர் கார்த்திக். இவர் தினமும் காலையில் ஜி என்ற எழுத்து பொறிக்கப்பட்ட காரில், வெள்ளை அங்கியையும், ஸ்டெத்தஸ்கோப்பையும் எடுத்து கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை வழக்கமாக கண்ட அந்த பகுதி மக்கள் அவரை அரசு மருத்துவர் என எண்ணினார்கள்.

இந்நிலையில் கார்த்திக்கின் நடவடிக்கைகளை தினமும் கவனித்து வந்த வசதியான குடும்பத்தை சேர்ந்த ஒருவர்தங்கள் வீட்டு பெண்ணை கார்த்திக்கிற்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணினார். இதையடுத்து கார்த்திக்கை சந்தித்த அவர், அவரது குடும்பம் பற்றி விசாரித்துள்ளார். அப்போது தனக்கு பெற்றோர் இல்லை என்று கூறிய கார்த்திக், உறவினர்கள் மட்டுமே இருப்பதாகவும், அரசு மருத்துவமனை ஒன்றில் தாம் பணிபுரிவதாகவும் சொன்னதாகக் கூறப்படுகிறது.

இவை அனைத்தையும் நம்பிய பெண்ணின் குடும்பத்தினர் நல்ல பையனாக தெரிகிறாரே என மேற்கொண்டு எதுவும் விசாரிக்காமல் திருமண ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய ஆரம்பித்தார்கள். இதனைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று கார்த்திக்கிற்கும் அந்தப் பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது. வியாழக்கிழமை அன்று ரெட்டேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தது.

அனைத்தும் நல்ல படியாக சென்று கொண்டிருப்பதாக எண்ணிய கார்த்திக்கிற்கு பிரச்சனை அவரது மாமா வடிவில் வந்தது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு மது அருந்தி விட்டு வந்த கார்த்திக்கின் மாமா வரதட்சனை பணம் தொடர்பாக பெண் வீட்டாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது போதையின் உச்சியில் இருந்த அவர், கார்த்திக்கே ஒரு பிச்சைக்காரன் என உண்மையை போட்டு உடைத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பெண் வீட்டார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

மேற்கொண்டு விசாரித்த போது கார்த்திக்கின் வாய் குளறத் தொடங்கியது. அப்போது தான் பெண் வீட்டாருக்கு உண்மை புரிய அங்கிருந்தவர்கள் கார்த்திகை புரட்டி எடுத்து, மாதவரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்கள். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கார்த்திக்கின் சொந்த ஊர் கோவை என்பதும், உறவினர்கள் என்று சொல்லிக் கொண்டு திருமணத்திற்கு வந்த பெரும்பாலானோர் போலிகள் என்பதும் தெரியவந்தது.

இதற்கிடையே 8 மாதங்களுக்கு முன்பு வில்லிவாக்கம் வந்த கார்த்திக், அங்கு தன்னை அரசு மருத்துவர் போல் காட்டிக் கொண்டு வசதியான வீட்டுப் பெண்ணை மணம் முடிக்க திட்டம் போட்டதும் விசாரணையில் தெரியவந்தது. எனவே கார்த்திக் இதற்கு முன்பு வேறு யாரையாவது ஏமாற்றி திருமணம் செய்துள்ளாரா அல்லது வேறு ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளாரா என்கின்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். வெளித்தோற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரின் பின்புலம் தெரியாமல் எடுத்த முடிவு இன்று ஒரு பெண்ணின் வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது.

Tags : #TAMILNADUPOLICE #CHEATED #ARRESTED #BRIDE