‘அடுத்த 2 நாட்களுக்கு’.. ‘14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Sep 14, 2019 06:40 PM
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சை, சேலம் ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் அதிகபட்சமாக 96.8 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கும், குறைந்த பட்சமாக 78.8 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கும் வெப்பநிலை பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
