‘பெட்ரோல் போட பைக்க எடுத்து போன பையன்’.. ‘வழியில் கிடந்த மின்சார வயர்’.. சென்னையை அதிர வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 16, 2019 11:33 AM

சென்னையில் சாலையில் கிடந்த மின்சார வயரில் தெரியமால் கால் வைத்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9th std student dies by electric cable shocking in Chennai

சென்னை போரூர் அடுத்துள்ள முகலிவாக்கம் சுபஸ்ரீ நகரைச் சேர்ந்தவர்கள் செந்தில்-வனிதா தம்பதியினர். செந்தில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் தீனா என்பவர் அரசு பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு பின் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு கார்ப்பரேஷன் வேலைக்காக குழி தோண்டப்பட்டுள்ளது. ஆனால் பணி இன்னும் முடிவடையாத நிலையில் குழி மூடப்படாமல் விடப்பட்டுள்ளது. மேலும் மின்சார வயர்கள் தரையின் மேலே போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவன் தீனா நேற்று தனது தந்தையின் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் போடுவதற்காக அந்த வழியே வண்டியைத் தள்ளிக்கொண்டு போயுள்ளார். மழை பெய்து குழியில் தண்ணீர் இருந்ததால், தீனா தெரியாமல் அதில் காலை வைத்துள்ளார். உடனே அவரின் மீது மின்சாரம் பாய்ந்து தண்ணீரிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டு மின் இணைப்பை துண்டித்து மாணவனை மீட்டுள்ளனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து தோண்டிய குழிகளை மூடாமல் விட்டதும், மின்வயர்களை தரையில் போட்டதுமே மாணவனின் உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் போராட்டத்தில் இறங்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மாணவனின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தரையில் கிடந்த மின்வயரினால் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #STUDENT #CHENNAI #DIES #ELECTRICSHOCK