'தண்ணி பிடிக்க போறப்போ'.. 'கடத்திட்டாங்க'.. '20 வருஷம் கழிச்சு உன்ன பாத்ததே போதும்பா'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Sep 11, 2019 01:46 PM
பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி, 1999-ஆம் ஆண்டு, இரவு 7 மணி வாக்கில், சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்தபோது, நாகேஸ்வர ராவின் மனைவி சிவகாமி 50 அடி தொலைவில் இருக்கும் குழாயடிக்கு தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார்.
இந்த சமயத்தில்தான், அவர்களது பால்மணம் மாறாத மகன் மீது டவலைப் போட்டு, யாரோ ஒருவர் கடத்துகிறார். அதை, நாகேஸ்வர ராவின் அண்ணன் மகள் பார்த்துவிட்டு, சிவகாமியிடம் சொல்ல, அதைக் கேட்டு நாகேஸ்வர ராவும் ஓடிவர, மொத்த குடும்பத்தினரின் கண்களிலும் படாமல் அவர்களின் மகனைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டார் யாரோ ஒரு மர்ம நபர். அதன் பிறகு 400 பேருக்கும் மேல் சேர்ந்து அந்த பாலகனைத் தேடியும் கிடைக்கவில்லை. போலீஸில் புகாரும் அளித்தனர். எனினும் குழந்தை காணாமல் போய் 5 வருடம் கழித்து, நாகேஸ்வர ராவ் - சிவகாமி தம்பதியர், மோகன வடிவேல் என்கிற வழக்கறிஞரை சந்தித்து உதவி வேண்டினர்.
அதன் பிறகுதான், குழந்தையை கடத்தியவர்கள், குழந்தையின் உண்மையான பெயரான சுபாஷ் என்பதற்கு பதிலாக, அஷ்ரஃப் என்று பெயர் மாற்றிவைத்து, திருவேற்காட்டில் உள்ள ஒரு ஆர்கைனைசேஷனில் விற்றுவிட, அங்கு வந்த அமெரிக்கத் தம்பதியர் குழந்தையினை சட்டப்படி தத்தெடுத்துள்ளனர் என்பது தெரியவந்தது. ஆனால் அதே தேதியில் 3 குழந்தைகள் தத்துக் கொடுக்கப் பட்டதால், வழக்கறிஞர் பொறுமையாக காத்திருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அவி மாந்தே என்கிற பெயரில் சுபாஷ் என்கிற அஷ்ரஃப் அமெரிக்காவில் வளர்வது, அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சுபாஷ் என்கிற அவி மாந்தேவுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி கேட்டபோது, அவரது வளர்ப்புப் பெற்றோர்கள் மறுத்துள்ளனர். ஆனால் சில நாட்களில், சுபாஷ் என்கிற அவி மாந்தே வழக்கறிஞர் மோகன வடிவேலுக்கு மெயில் அனுப்பத் தொடங்கியதோடு தனது பெற்றோர்கள் பற்றி தெரிந்துள்ளார். இதெல்லாம் இந்த 20 வருடங்களில் நிகழ்ந்ததுதான்.
இதனை அடுத்து சென்னைக்கு விரைந்து தனது பெற்றோர்களை சந்தித்து, தான் தற்போது டிகிரி முடித்துவிட்டதாகவும், அமெரிக்கா செல்லும்போது பெற்றோர்களை தன்னுடன் அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் அவரைப் பார்த்த தந்தை நாகேஸ்வரராவ், ‘20 வருஷம் கழிச்சு உன்னை பார்த்ததே போதும்பா.. இதுக்கு மேல வேற என்ன வேணும்’ என்று கூறி, சுபாஷ் சிறுவயதில் விளையாண்ட பொம்மைகளை சுபாஷிடம் காட்டி உடைந்து அழுதுள்ளார்.