'மனச திடமா வச்சுகோங்கமா,உங்க கணவர்...' 'போன் பண்ணி ஒரு மாசம் ஆச்சு...' நெஞ்சை உறைய வைக்கும் சோக நிகழ்வு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சவூதி அரேபியாவில் பணிபுரியும் கணவருடன் ஒரு மாதமாக தொடர்பில் இல்லாத நிலையில் தீடீரென கணவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு குடும்பமே சோகத்திலும் சந்தேகத்திலும் ஆழ்ந்துள்ளது.
44 வயதான கணிக்குமார் என்பவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆண்டிகுளப்பம்பட்டியைச் சேர்ந்தவர். மனைவி மற்றும் இவர் கடந்த 13 வருடங்களாக சவுதி அரேபியாவில் கிரேன் ஆப்ரேட்டராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் சொந்த ஊரான புதுக்கோட்டையிலேயே வாழ்ந்து வருகின்றனர். பொருளாதார தேவைகளுக்காக தன் குடும்ப உறுப்பினர்களை விட்டு சவுதிக்கு சென்ற கணிக்குமார் அடிக்கடி தன் குடும்பத்தாரோடு பேசி வருவாராம்.
ஆனால் கடந்த ஒரு மாதமாகவே கணிக்குமாரிடம் இருந்து அழைப்பு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பதற்றம் அடைந்த குடும்பத்தினர் அவரைத் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் தீடீரென சவுதி அரேபியாவில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அப்போது கணிக்குமாருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது, அதனால் இங்குள்ள மருத்துவமனையில் உங்கள் கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனக்கூறி உடனடியாக அழைப்பை துண்டித்துள்ளனர்.
இதனால் பயத்தில் உறைந்த குடும்பம் மீண்டும் அவரை தொடர்புகொள்ள முயற்சித்தும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. மீண்டும் சவுதி அரேபியாவில் இருந்து திடீரென கணிக்குமாரின் மனைவிக்கு மீண்டும் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில்,'மனதை திடமாக வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் கணவன் இறந்துவிட்டார்' என்ற தகவல்களைக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டனர்.
தற்போது சவுதியில் இருந்து இந்தியா வர விமான சேவை இல்லை. மேலும் கணிக்குமார் கொரோனோவால் பாதிக்கப்பட்டு இறந்ததால் அவரின் உடலை மீட்டு வருவதற்கான வாய்ப்பும் இல்லை என்று கணிகுமாரின் மனைவி மற்றும் குடும்பத்தார் வருத்தத்தில் உள்ளனர். மேலும் தனது கணவரின் முகத்தை இறுதியாக பார்க்க முடியாமல் அவரின் மனைவியும் குழந்தைகளும் தவித்து வருகின்றனர்.
மேலும் கொரோனா பாதிப்பால்தான் உயிரிழந்தாரா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும், இறப்புக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கணிக்குமாரின் உறவினர்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்