'இறந்த' பெண்ணின்... 'இறுதிச்சடங்கில்' பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா... 'வழக்கு' பாய்ந்தது!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவால் இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியை அடுத்த உல்ஹாஸ்நகர் என்ற பகுதியில் சமீபத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து போனார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 25-ம் தேதி அவரின் உடலை வெளியில் எடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் போலீசார் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆனால் இறுதிச்சடங்கு செய்வதற்காக அந்த பெண்ணின் உடலை குடும்பத்தினர் வெளியில் எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க அவர்கள் அந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 70 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து தொற்றுநோய் சட்டத்தை மீறியதற்காக அந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இறந்தவரின் சடலத்தில் இருந்து கொரோனா தொற்று பரவுமா?
இறந்தவரின் சடலத்தில் இருந்து கொரோனா தொற்று பரவுமா? என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
* கொரோனா தொற்று பரவ பிரதான காரணமாக இருப்பது, தும்மும் போதும், இருமும் போதும் நுண்துகள்கள் சிதறி பரவுவதுதான். இறந்தவர் தும்முவதோ, இருமுவதோ கிடையாது என்பதால் தொற்று ஏற்படாது.
* ஒருவர் இறந்ததும் அவரது உடலில் வைரஸ் தொற்று பல்கி பரவுவது நின்று போகும்.
* சடலத்தை எரிப்பதால், புதைப்பதால் தொற்று பரவாது. ஆழமான குழியை தாண்டி வைரஸ் மேலே ஏறி வராது. எரிக்கும் போது 4000 டிகிரி வெப்பத்தில் வைரஸ் உயிரோடு இருக்காது.
* புகையால் கொரோனா வைரஸ் பரவாது.
* தோலில் வைரஸ் துகள்கள் இருக்கலாம், அப்படி இருந்தாலும் சடலத்தை தொடாத வகையில் வைரஸ் பரவாது. வழிகாட்டுதலின்படி, இறந்தவரின் உடலை தொட அனுமதி கிடையாது. அதனை சுகாதார ஊழியர்களே தகுந்த பாதுகாப்புடன் கையாள்வார்கள்.

மற்ற செய்திகள்
