'கவனக்குறைவால் நிகழ்ந்த விபரீதம்'... 'மனைவியை தொடர்ந்து கணவருக்கு நேர்ந்த பயங்கரம்'... 'உயிருக்கு போராடும் மாமியார்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 09, 2020 12:05 AM

பூச்சிக்கொல்லி மருந்தைக் கடலை மாவு என்று நினைத்து போண்டா சுட்டு சாப்பிட்டதில் மனைவி உயிரிழந்த நிலையில், கணவனும் உயிரிழந்துள்ளார்.

Wife and Husband died after eats pesticide mixed bonda

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை சின்னத் தெருவைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி - லட்சுமி தம்பதியரின் மகன் சுகுமார். இவருக்கும் (28), கோரக்குப்பத்தைச் சேர்ந்த பாரதி (20) என்ற பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், `இனிப்பு போண்டா’ சுடுவதற்காகத் தனது மாமனார் பெரியசாமியிடம் கடலை மாவு வாங்கிவருமாறு மருமகள் பாரதி கூறியிருக்கிறார்.

கடைக்குச் சென்ற பெரியசாமி வெல்லம், கடலை மாவு மற்றும் மிளகாய் தோட்டத்துக்கு அடிப்பதற்காகப் பூச்சிக்கொல்லி மருந்து பாக்கெட்டையும் வாங்கிக் கொண்டு வந்து, மொத்தத்தையும் அவர் சமையல் அறையில் ஒரே இடத்தில் வைத்துவிட்டு வயல்வெளிக்குச் சென்றுவிட்டார். இரண்டு பாக்கெட்டிலிருப்பதும் கடலை மாவு என்று நினைத்த பாரதி, பூச்சிக்கொல்லி மருந்தால் போண்டா சுட்டுள்ளார். பின்னர் கணவர் சுகுமார், மாமியார் லட்சுமியுடன் சேர்ந்து பாரதியும் நிறைய போண்டாக்களைச் சாப்பிட்டுள்ளார்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்குவந்த மாமனார் பெரியசாமிக்கும் போண்டா கொடுத்துள்ளார் பாரதி. போண்டாவைச் சாப்பிடப்போன பெரியசாமி பூச்சிக்கொல்லி மருந்து வாடை அடிக்கவும் சந்தேகமடைந்து, சமையல் அறைக்கு ஓடிச்சென்று பூச்சிக்கொல்லி மருந்து பாக்கெட்டைத் தேடியுள்ளார். பாக்கெட் காலியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், `இது, பூச்சிக்கொல்லி மருந்து. அதையும் சேர்த்து கலந்து விட்டீர்களா?’ என்று கேட்க, பதறிப்போன மருமகள் பாரதி, `ஆமாம் மாமா, கடலை மாவுனு நினைத்து அதையும் கலந்து போண்டா சுட்டுட்டேன்’’ என்று கூறியதாகத் தெரிகிறது.

சிறிது நேரத்தில் பெரியசாமியின் மனைவி லட்சுமி, மகன் சுகுமார், மருமகள் பாரதி ஆகிய 3 பேரும் வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர். அக்கம் பக்கம் வசிக்கும் உறவினர்கள் உதவியுடன் பெரியசாமி அவர்களை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்குச் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை மாலை பாரதி உயிரிழந்துவிட, செவ்வாய்கிழமை மதியம் கணவர் சுகுமாரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மாமியார் லட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்து வருகின்றார். பாரதிக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆகியுள்ளதால், பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.