மருந்து வாங்க போன கணவரிடமிருந்து வந்த ஒரு ‘போன் கால்’.. உடனே கொளுத்தும் வெயிலில் நடந்தே சென்ற ‘கர்ப்பிணி’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் போலீசாரிடம் சிக்கிய கணவரை மீட்க கர்ப்பிணி பெண் வெயிலில் நடந்தே வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றித்திரிபவர்களை எச்சரித்தும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை வைகை ஆற்றின் வடக்கே இருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் அனைத்து பாலங்களும் மூடப்பட்டு, கோரிப்பாளையம் ஏ.வி.மேம்பாலம் மட்டும் அத்தியாவசிய தேவைக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அந்த வழியாக வாகனங்கள் அதிகமாக சென்றால் அவற்றை நிறுத்தி விசாரித்து அனுப்புமாறு காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் காலை 9 மணி முதல் 1 மணி வரை வாகனங்களை நிறுத்தி விசாரித்த பின்னரே போலீசார் அனுப்புகின்றனர்.
இந்த நிலையில் கோரிப்பாளையம் அருகே உள்ள ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது கர்ப்பிணி மனைவிக்கு மருந்து வாங்குவதற்காக பைக்கில் சென்றுள்ளார். கோரிப்பாளையம் ஏ.வி.மேம்பாலம் அருகே வந்தபோது போலீசார் கார்த்தியை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது கர்ப்பிணி மனைவிக்கு மருந்து வாங்க செல்வதாக கார்த்திக் கூறியுள்ளார். ஆனால் போலீசார் கார்த்தியின் பைக்கை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து நடந்த விஷயத்தை போனில் மனைவியிடம் கார்த்திக் தெரிவித்துள்ளார். உடனே கணவரை மீட்க கொளுத்தும் வெளியில் கர்ப்பிணி பெண் தனியாக நடந்தே ஏ.வி.மேம்பாலத்திற்கு வந்துள்ளார். பின்னர் போலீசாரிடம் பேசி கணவரையும், பைக்கையும் மீட்டு சென்றுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரின் உன்னத சேவையை பாராட்டுவதாகவும், அதேபோல் அவசர தேவைக்காக மருந்து வாங்க செல்பவர்களிடம் போலீசார் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.