குழந்தை இருப்பதை மறைத்து... 2வது திருமணம் செய்த பெண்!.. உண்மை அறிந்த 2வது கணவன் வெறிச்செயல்!.. நெஞ்சை நொறுக்கும் கோரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | May 21, 2020 08:21 PM

காட்பாடி அருகே முதல் திருமணத்தை மறைத்ததால் குழந்தையை தரையில் அடித்து தாயின் 2-வது கணவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

katpadi second marriage husband murders infant of his wife

திருப்பத்தூர் அருகே உள்ள பாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் சிவசக்தி (வயது22) லாரி டிரைவர். இவர் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த லாவண்யா (20) என்பவரை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியின் மகள் பிரவீனா(2).

கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். லாவண்யா குழந்தையுடன் சத்துவாச்சாரியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் அருகே உள்ள தேவரிஷி குப்பத்தை சேர்ந்த பிரவீன்குமார் (22) என்பவரை லாவண்யா 2-வது திருமணம் செய்துகொண்டார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு லாவண்யாவின் குழந்தை பிரவீனாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சில மணி நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது.

இதைத் தொடர்ந்து குழந்தையின் உடலை லாவண்யா அவருடைய முதல் கணவர் சிவசக்தியிடம் ஒப்படைத்தார். அவர் குழந்தை எப்படி இறந்தது என்று கேட்டதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவசக்தி திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். அதில் தனது மனைவி வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு குழந்தையை கொலை செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இது தொடர்பாக கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் முரளி குழந்தையின் தாய் லாவண்யா மற்றும் அவரது 2-வது கணவர் பிரவீன்குமார் ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே பிரேத பரிசோதனையில் குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

போலீசார் லாவண்யா மற்றும் பிரவீன்குமாரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

லாவண்யா ஏற்கனவே தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்து பிரவீன்குமாரை 2-வதாக திருமணம் செய்தார். அவரது குழந்தை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அவரது தாய் வீட்டிலேயே இருந்தது.

குழந்தையை பிரிந்து அவரால் இருக்க முடியவில்லை. இதனால் சத்துவாச்சாரிக்கு வந்து குழந்தையை தூக்கிக்கொண்டு தேவரிஷி கும்பத்திற்கு சென்றார்.

அப்போதுதான் பிரவீன் குமாருக்கு லாவண்யாவிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பிரவீன் குமார் குழந்தையை தூக்கி தரையில் அடித்துள்ளார். இதில் குழந்தை தலையின் பின்பக்கம் அடிபட்டு மயங்கியது.

இதனையடுத்து குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று குழந்தையை சேர்த்தனர். அப்போது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறியுள்ளனர்.

குழந்தை இறந்து விட்டதால் கொலையை மறைப்பதற்காக குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டது என நாடகமாடியது தெரியவந்தது. லாவண்யா மற்றும் பிரவீன்குமாரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.