'கர்ப்பமான காதல் மனைவி'... 'ஆசபட்டத வாங்கி கொடுக்க முடியலியே'...'ஒரு நிமிடத்தில் உருக்குலைந்த குடும்பம்'... சென்னையில் நடந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கணவர் போதிய வருமானம் இல்லாமல் தவித்த நிலையில், நிறைமாத கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த புழல் பகுதியில் வசித்து வருபவர் ஜெகன் செல்வராஜ். 25 வயதான இவர், அதே பகுதியில் தள்ளு வண்டியில் சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சரண்யா என்ற இளம் பெண்ணும் 2 வருடங்கள் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், திருமணமும் செய்து கொண்டனர். 20 வயதான சரண்யா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதனிடையே தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், ஜெகன் செல்வராஜ் தனது வியாபாரத்திற்குச் செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால் போதிய வருமானம் இன்றி தவித்ததாகக் கூறப்படுகிறது. மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ள சூழ்நிலையில், அவர் ஆசை பட்டத்தை வாங்கி கொடுக்க முடியவில்லையே என்று ஜெகன் வருத்தத்தில் இருந்துள்ளார். வருமானமும் இல்லாத சூழ்நிலையில், கணவனுக்கும், மனைவிக்கும் மனவருத்தம் ஏற்பட்டுள்ளது. அது சில நேரங்களில் சிறு சண்டையிலும் முடிந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காலையில் வியாபாரத்துக்குச் செல்வதற்காகத் தள்ளுவண்டியில் காய்கறிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். அப்போது மீண்டும் ஜெகனுக்கும், மனைவி சரண்யாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே கோபித்துக் கொண்டு சரண்யா வீட்டிற்குள் சென்றுவிட்டார். இதையடுத்து சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் சென்ற, ஜெகன் கதறித் துடித்தார்.
ஜெகனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, சரண்யா, புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சரண்யாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே சரண்யா இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே சரண்யாவுக்குத் திருமணமாகி 2 வருடங்களே ஆவதால் இதுபற்றி சென்னை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். இருவருமே மிகவும் இளம் வயதில் இருக்கும் நிலையில், கணவன், மனைவிக்குள் வரும் சிறு சிறு பிரச்சனைகளை அனுசரித்து புரிந்து அதனைச் சரி செய்திருக்க வேண்டும். ஆனால் ஒரு நிமிடத்தில் எடுத்த தவறான முடிவு, அந்த குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. அதுவும் நிறைமாத கர்ப்பிணியான சரண்யா, இந்த கோர முடிவைத் தேடிக் கொண்டது தான் அதிர்ச்சியின் உச்சம்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றைத் தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.