‘என் கணவர் முகத்தக்கூட பார்க்க முடியலையே’.. கதறியழுத மனைவி.. ஊரடங்கில் நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 22, 2020 01:52 PM

ஊரடங்கால் உயிரிழந்த கணவரின் உடலை பெறமுடியால் வைக்கோலில் உருவ பொம்மை செய்து இறுதி சடங்கு செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

UP man family holds his last rites with straw dummy amid Lockdown

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுனில் என்பவர் கடந்த ஜனவரி மாதம் வேலைக்காக டெல்லி சென்றுள்ளார். அங்கு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சொந்த ஊருக்கு வர முடியாமல் தவித்துள்ளார். இதனிடையே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அவரை வேறு மருத்துமனைக்கு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து 3 மருத்துவமனைகளுக்கு சென்ற பிறகு இறுதியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து சுனில் உடல்நலகுறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அவர் பணியாற்றிய நிறுவனத்தின் உரிமையாளர் சுனிலின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சுனிலின் மனைவி பூனம் அவரது கணவருக்கு போன் செய்துள்ளார். போன் தொடர்ந்து ரிங்காகிக் கொண்டே இருந்துள்ளது. ஆனால் யாரும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 14ம் தேதி சுனிலின் போனை காவலர் ஒருவர் எடுத்து பேசியுள்ளார். அவர் சுனில் இறுந்துவிட்டதாக அவரின் மனைவி பூனமிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டதும் பூனம் கதறி அழுதுள்ளார். அப்போது, ‘நாங்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லி வருவதற்கான அனுமதியை பெற்று தருகிறோம். நீங்கள் வந்து உங்கள் கணவரின் உடலைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதற்கு பதிலளித்த பூனம், ‘எனக்கு 5 குழந்தைகள் உள்ளன. ஒரு குழந்தைக்கு ஒன்றரை வயதுதான் ஆகிறது. என்னால் இவர்களை இங்கே தனியாக விட்டுவிட்டு வர முடியாது. கார் எடுத்து வந்து எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல என்னிடம் பணம் இல்லை’ எனக் கூறி அழுதுள்ளார். இதனை அடுத்து கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உறவினர்களிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.

இதனால் தனது கணவரின் இறுதி சடங்கை டெல்லி காவல்துறையினரையே செய்யும்படி பூனம் கேட்டுள்ளார். ஆனால் குடும்பத்தினர் கைப்பட கடிதம் எழுதித் தராமல் தங்களால் இறுதி சடங்கை செய்ய இயலாது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.இதனை அடுத்து பஞ்சாத்து தலைவரின் உதவியை பூனம் நாடியுள்ளார். அவரும் டெல்லி போலீசாரிடம் பேசியுள்ளார்.

ஆனால் குடும்பத்தின் ஒப்புதல் கடிதம் இல்லாமல் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். தற்போது பூனம் கையெழுத்திட்ட படிவத்தை டெல்லி போலீசாருக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சுனிலின் உடல் அடக்கம் செய்யாமல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சுனில் அம்மை நோய் தாக்கி உயிரிழந்திருப்பதாகவும், அவருக்கு கொரோனா நோய் இல்லை என்றும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் வைக்கோலை வைத்து சுனிலின் உருவ பொம்மை செய்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இறுதி சடங்கை செய்துள்ளனர். அப்போது தன் கணவர் முகத்தைக்கூட பார்க்க முடியவில்லையே என பூனம் கதறியழுதுள்ளார்.