‘பக்கெட் தண்ணீரில் மூழ்கி’... ‘அடுத்தடுத்து உயிரிழந்த குழந்தைகள்’... ‘திருப்பூரில் நடந்த சோகம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூரில் தண்ணீர் வாளியில் மூழ்கி அடுத்தடுத்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம்தைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன் - மோகனா தம்பதி. இவர்களுக்கு ஜெகத் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாட, தம்பதி இருவரும் குழந்தை ஜெகத்துடன் செட்டிபாளையம் ரோடு பாலாஜி நகரில் உள்ள மோகனாவின் தந்தை சுப்பிரமணியன் வீட்டிற்கு கடந்த 15-ந் தேதி சென்றனர். பொங்கல் முடிந்தும் அங்கேயே தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று வீட்டில் மோகனா மற்றும் அவரது தாயார் கோகிலா ஆகியோர் மட்டும் இருந்துள்ளனர்.
பின்னர் மதியம் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு தொட்டிலில் தூங்க வைத்த மோகனா, துணிகள் துவைப்பதற்காக, சோப்பு பவுடர் வாங்கிவர தனது அம்மாவை கடைக்கு அனுப்பியுள்ளார். பின்னர் சோப்பு பவுடர் வாங்கிவிட்டு வீட்டிற்குள் பாட்டி கோகிலா வந்த போது தொட்டிலில் தூங்கிய குழந்தையைக் காணவில்லை. இதனால் சந்தேகமடைந்து அருகிலிருந்த குளியறைக்கு சென்று பார்த்தபோது தண்ணீர் இருந்த வாளியில் குழந்தை தலைகுப்புற கிடந்தது. இதனால் கோகிலாவும், மோகனாவும் அலறியடித்து குழந்தையை தூக்கிக்கொண்டு பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாட்டி கோகிலா கடைக்கு சென்ற நேரத்தில் தூக்கம் கலைந்து எழுந்த குழந்தை தொட்டிலை விட்டு இறங்கி உள்ளது. பின்னர் அருகில் மூடப்படாமல் இருந்த பாத்ரூமிற்குள் சென்று அங்கிருந்த பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில் கை விட்டு விளையாடி உள்ளது. அப்போது தலைக்குப்புற பிளாஸ்டிக் வாளியில் உள்ளே விழுந்த குழந்தை அப்படியே மூச்சு திணறி இறந்து இருக்கலாம் என்று போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல், நேற்று முன்தினம் திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்துப் பிறந்த பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அனுப்பர்பாளையம் படேல் வீதியை சேர்ந்தவர்கள் கண்ணன் (30) - பாண்டி யம்மாள் (25) தம்பதி. இவர்களுக்கு 1 வயதில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், கணவர் வேலைக்கு சென்றுவிட, பாண்டியம்மாள் வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை கனிஷ்கா வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தது.
பின்னர், பாண்டியம்மாள் வெளியே வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் காணததால், வீட்டின் முன்புறம் தண்ணீர் பிடித்து வைத்திருந்த வாளிக்குள் குழந்தை கனிஷ்கா மூழ்கி கிடந்ததை பார்த்து அலறினார். பின்னர் குழந்தையை தூக்கி கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் தண்ணீர் வாளியில் மூழ்கி அடுத்தடுத்து குழந்தைகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
