‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்’... ‘காளையை அழைத்து வந்த’... ‘சிவில் என்ஜீனியருக்கு நேர்ந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 17, 2020 04:47 PM

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தனது காளையை அழைத்து வந்த இளைஞர் ஒருவர், மற்றொரு காளை முட்டியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BE Civil Engineer dies in Madurai Alanganallur Jallikattu

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. இதில் தமிழக அமைச்சர்களின் காளைகள் உள்பட 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் சீறி பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற மாடு பிடி வீரர்கள் 28 பேர், காளை முட்டியதில் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 16 காளைகளை அடக்கி, சிறந்த மாடு பிடி வீரராக மாருதி காரை பரிசாக பெற்ற பிரபாகரன் என்ற வீரருக்கு காளை கழுத்தில் குத்தியதால் காயம் ஏற்பட்டது.

சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தொடர்ந்து பங்கேற்காமல், ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பிரபாகரனுக்கு முகத்தில் 5 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் தனது காளையை பங்கேற்க அழைத்து வந்திருந்தார். களம் கண்ட காளையை பிடிக்க மாடு வெளியேறும் இடத்தில் நின்று கொண்டிருந்த ஸ்ரீதர், அவரது காளை வந்தபோது கழுத்தில் கயிறு கட்டி இழுத்து செல்ல முற்பட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அந்த வழியில் சென்ற மற்றொரு காளைமாடு முட்டியதில் வலதுப் பக்க வயிற்றில் படுகாயம் அடைந்த ஸ்ரீதர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பி.இ. சிவில் என்ஜீனியரான ஸ்ரீதர் தற்போது சட்டக்கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ள நிலையில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #JALLIKATTU #MADURAI #BE #CIVIL #ENGINEER #DIED