VIDEO: ‘விளையாடும்போது குழிக்குள் தவறி விழுந்த சிறுமி’.. பொங்கல் கொண்டாட வந்த இடத்தில் நடந்த விபரீதம்..! பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 17, 2020 08:51 AM

விழுப்புரம் அருகே வீடு கட்டுவதற்கு தோண்டப்பட்ட குழியில் சிறுமி சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Villupuram child falling into 10 feet pit, youngster rescued

விழுப்புரம் மாவட்டம் சின்னபாபுசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா. இவர் தமிழக அரசின் வீடு கட்டும் திட்ட பணிக்காக 7 அடி ஆழத்தில் போர்வெல் இயந்திரத்தைக் கொண்டு அஸ்திவார குழி அமைத்துள்ளார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது சகோதரி சரோஜாவின் வீட்டுக்கு பாஸ்கரன் என்பவர் குடும்பத்துடன் வந்துள்ளார்.

அப்போது அந்தப் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த பாஸ்கரனின் மகள் கோபினி (4) எதிர்பாராத விதமாக குழிக்குள் தவறி விழுந்துள்ளார். இதில் பயந்துபோன கோபினி அழுதுகொண்டே காப்பாற்றுமாறு கத்தியுள்ளாள். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பதறி அடித்துக்கொண்டு வந்த குடும்பத்தினர், சிறுமி குழிக்குள் சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே தங்களது கையை விட்டு குழந்தையை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் சிறுமியின் கை குழிக்குள் சிக்கியிருந்ததால் அவரால் கையை மேலே தூக்க முடியவில்லை.

இதனை அடுத்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழிக்கு பக்கவாட்டில் மற்றொரு குழி தோண்டி சிறுமியை மீட்கும் முயற்சியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1 மணிநேர போராட்டத்துக்கு பிறகு குழிக்குள் சிக்கியிருந்த சிறுமியை பத்திரமாக இளைஞர்கள் மீட்டனர்.

மேலும் இதனைப் பார்க்க கூட்டம் கூடியதால் குழிக்குள் மண்சரிவு ஏற்பட்டு விபரீதம் நடந்திருக்கும் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்த தீயணைப்பு வீரர்கள், இதுபோன்ற சமயங்களில் பொதுமக்கள் குழிக்கு அருகே அதிக அளவில் கூடி மண்சரிவை ஏற்படுத்தாமல் இருந்தாலே குழிக்குள் விழுந்தவர்களை விரைவாக மீட்க முடியும் என தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பு திருச்சி அருகே சிறுவன் சுஜித் போர்வெல் குழிக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #VILLAGE #VILUPPURAM #PIT #GIRL