'17 வயது சிறுமி... டி.ஐ.ஜி தலைமறைவு... மும்பையில் பயங்கரம்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manishankar | Jan 15, 2020 01:25 PM
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய டி.ஐ.ஜி ஒருவரே, சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவாகியுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில், டி.ஐ.ஜி-யாக இருப்பவர், நிஷிகாந்த் மோர். கடந்த ஜூன் மாத்தத்தில், 17 வயது இளம் பெண்ணிடம் அவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து, போலீஸில் அந்தப் பெண் புகார் கொடுத்திருக்கிறார். புகாரை ஏற்க மறுத்த போலீசார், 6 மாதம் கழித்து டிசம்பர் 26-ம் தேதி நிஷிகாந்த் மோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதனால், தான் கைது செய்யப்படலாம் என அஞ்சி அவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், டி.ஐ.ஜி தரப்பிலிருந்து புகாரை வாபஸ் வாங்குமாறு அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு மிரட்டல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, தற்கொலை செய்துகொள்ளப் போவதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு சிறுமி வெளியேறியுள்ளார். ஆனால், டி.ஐ.ஜி ஆதரவாளர்கள் தான் அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றிருப்பதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினை பூதாகரமானதும், குற்றச்சாட்டுக்குள்ளான போலீஸ் டி.ஐ.ஜி மீது மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், நிஷிகாந்த் மோருக்கு உதவியாக இருந்த டிரைவர் மற்றும் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநில டி.ஜி.பி-க்கு இச்சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ள நிலையில், டி.ஐ.ஜி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
