‘வீட்டுக்கு வெளியே விளையாடிட்டு இருந்தா’.. ‘கடைசியா அப்போதான் பாத்தேன்’.. கண்ணீர் மல்க கூறிய தந்தை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 18, 2020 04:53 PM

கோவை அருகே 5 வயது குழந்தை காணாமல் போனதால் கிராமமே பொங்கலை புறக்கணித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Coimbatore 5 year old girl Samini missing 4 months before

கோவை மாவட்டம் சூலூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார்-கவிதா தம்பதியினர். இவர்களுக்கு வெற்றிவேல் (7), சாமினி (5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த மகள் சாமினி திடீரென காணாமல் போயுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆனால் நான்கு மாதங்களாகியும் சிறுமி கிடைக்காததால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதனால் கடந்த தீபாவளி பண்டிகையை புறக்கணித்த அவர்கள், இந்த ஆண்டு பொங்கலையும் புறக்கணித்துள்ளனர். இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் காணாமல் போன ஹரிணி என்ற 2 வயது சிறுமி 100 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டார். இதேபோல் தங்களுடைய மகளும் விரைவில் மீட்கப்படுவார் என சாமினியின் பெற்றோர் காத்துக் கிடக்கின்றனர்.

காஞ்சிபுரம் ஹரிணியை மீட்பதற்கு கரூரைச் சேர்ந்த இணைந்த கைகள் என்ற அமைப்பினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். தற்போது சாமினியை மீட்பதற்கும் இந்த அமைப்பு இறங்கியுள்ளது. அதனால் சாமினி தொடர்பான போஸ்டர்களை அடித்து அதை பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.

குழந்தை காணாமல் போனது குறித்து தெரிவித்த சாமினியின் தந்தை ஜெயக்குமார், கடந்த அக்டோபர் 5ம் தேதி மதிய உணவு இடைவெளிக்கு வீட்டுக்கு வந்தேன். அப்போது மகள் சாமினி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். அதுதான் அவளை நான் கடைசியாக பார்த்தது. வேலை முடிந்து மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்தோம். அப்போது வீட்டில் மகள் இல்லை. அதனால் போலீஸில் புகார் அளித்தோம். இப்போது வரை என் மகளை மீட்க முடியவில்லை.

நாங்க மட்டுமில்ல எங்க கிராமமே இன்னும் சோகத்தில்தான் இருக்கு. அதானல் எந்த கொண்டாட்டத்திலும் ஈடுபடுவதில்லை. மகள் கிடைத்த பிறகுதான் எங்களுக்கு தீபாவளி, பொங்கல் எல்லாமே. நீண்ட நாட்களாக வேலைக்கு போகவில்லை. சாப்பாடு, தூக்கம் எதுவுமில்லை. என் மனைவியின் உடல்நலம் மோசமடைந்துவிட்டது. எந்த நேரமும் சாமினியின் போட்டைப் பார்த்துக்கொண்டும், அவளது உடைகளை அணைத்துக்கொண்டும் அழுதுகொண்டே இருக்கிறார் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Tags : #POLICE #COIMBATORE #GIRL #MISSING