'காதலித்த மனைவி ஒரு வீட்டில்'... 'பேஸ்புக் காதலி இன்னொரு வீட்டில்'... கணவர் செய்த அட்டூழியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்15 ஆண்டுகளாக காதலித்த மனைவியுடன் வாழ்ந்து வந்த நபர், பேஃஸ்புக் காதலியுடன் ரகசிய குடித்தனம் நடத்தி வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோடு பகுதியை சேர்ந்த ரூபஸ் ஜெரால்டு. இவர் காட்டாத்துறை கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை 15 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர், 10 லட்சம் ரூபாய் ரொக்கமும், 101 சவரன் நகையும் வரதட்சணையாக கொடுத்தனர். மகிழ்ச்சியாக சென்ற திருமண வாழ்க்கையின் பயனாக, ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
இதனிடையே ரூபஸ் ஜெரால்டுக்கு முகநூல் பயன்பாடு அதிகமாக இருந்துள்ளது. எந்த நேரமும் முகநூலிலேயே மூழ்கி கிடந்துள்ளார். இதனால் முகநூல் மூலம் 22 வயது பெண் ஒருவரின் பழக்கம் கிடைத்துள்ளது. தினமும் பல மணி நேரம் முகநூலில் சாட்டிங் செய்த ரூபஸ், அந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்தினார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணே கதி என கிடந்த ரூபஸ், மனைவியின் நகை மற்றும் பணத்தை எடுத்து முகநூல் காதலிக்கு செலவு செய்ய தொடங்கி உள்ளார்.
கேரளாவுக்கும் அந்த பெண்ணை அழைத்து சென்று தனது காதலை வளர்த்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவனின் லீலைகள் மனைவிக்கு தெரியவர அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். இதையடுத்து கணவன் ரூபஸிடம் நடந்த சம்பவங்கள் குறித்து அவரது மனைவி தட்டி கேட்டுள்ளார். ஆனால் மனைவிடம் சண்டையிட்ட அவர், மனைவி மற்றும் குழந்தைகளை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. மனைவி இல்லாததால் முகநூல் காதலியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து ரூபஸ் குடும்பம் நடத்தியுள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மனைவியிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் இருதரப்பு பெரியவர்களும் சமாதானம் பேசி ரூபசை முகநூல் காதலியை கைவிடச் செய்து மனைவியுடன் சேர்த்து வைத்துள்ளனர். இதற்கிடையே மனைவிக்கு தெரியாமல் மூலச்சல் பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து, முகநூல் காதலியுடன் ரூபஸ் ரகசிய குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி இதற்கு மேல் பொறுக்க முடியாது என, கணவரின் அட்டகாசம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை அறிந்து ஆத்திரமடைந்த ரூபஸ் 20 பேர் கொண்ட கூலிப்படை கும்பலை அழைத்துக் கொண்டு, மனைவியை கொலை செய்யும் திட்டத்துடன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு மனைவி இல்லாததால் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி சூறையாடியதோடு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடியடித்துச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் தேடுவதை அறிந்த ரூபஸ், தற்போது தலைமறைவாகியுள்ளார். அழகான குடும்பத்தை விட்டு, முகநூல் பழக்கத்தால் தற்போது குடும்பமே நிலைகுலைந்து போயியுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
