‘கல்யாணம் முடிஞ்சு 4 மாசமா வீட்டுக்கு வராத கணவன்’.. தேடிப்போன மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 25, 2020 06:18 PM

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Husband cheated wife by second marriage in Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேந்தகுடி கிராமத்தை சேர்ந்தவர் சிவனேசன். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தில் துணைமேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த தங்கமணி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த ஏழு வருடங்களாக உறவினர்களுக்கு தெரியப்படுத்தாமல் தங்கமணியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்ற சிவனேசன், தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிருந்தாதேவி என்ற பெண்ணை சிவனேசனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனை அடுத்து திருமணமான ஒரு வாரத்தில் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சிவனேசன் சென்றுள்ளார்.

ஆனால் பல மாதங்கள் கடந்தும் சிவனேசன் சொந்த ஊருக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் பிருந்தாதேவி செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை எப்போது அழைத்து செல்வீர்கள் என சிவனேசனிடம் கேட்டுள்ளார். அப்போது பல காரணங்களை கூறி காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பிருந்தாதேவி, சிவனேசன் வேலைபார்க்கும் நிறுவனத்துக்கே நேரில் சென்றுள்ளார். அங்கு சிவனேசனை பற்றி விசாரித்து அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அந்த வீட்டில் வேறொரு பெண் 5 வயது மகளுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போதுதான் தனது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் விஷயம் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பிருந்தாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவனேசனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #MARRIAGE #HUSBAND #WIFE #CHEATED #PUDUKKOTTAI