விரைவில் ‘பறிக்கப்பட்ட’ மிக அழகான ‘ஆசீர்வாதங்கள்’... அது ஒன்றே ‘ஆறுதல்’... கணவர், மகளை இழந்து... ‘கலங்கும்’ கோபின் ‘மனைவி’...
முகப்பு > செய்திகள் > உலகம்கணவர் கோப் மற்றும் மகளின் மரணம் குறித்து கோபின் மனைவி முதல்முறையாக தன் வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த 26ஆம் தேதி ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதில் அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீரரான கோப் பிரயன்ட்டும், அவருடைய 13 வயது மகளும் இருந்துள்ளனர். இவர்களின் மரணம் அமெரிக்க மக்களுக்கும், கூடைப்பந்தாட்ட ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடைய மறைவிற்கு பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துவந்த நிலையில், கோப் பிரையன்டின் மனைவி மட்டும் இதுவரை எதுவும் பேசாமல் மௌனமாக இருந்துவந்தார். இந்நிலையில் தற்போது அவர் முதல்முறையாக கணவர் மற்றும் மகளின் மரணம் பற்றிய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவில், “இந்தக் கொடுமையான நேரத்தில் எனக்கு ஆதரவையும், அன்பையும் காட்டிய மக்களுக்கும், என் மகள்களுக்கும் நான் முதலில் நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்களுடைய ஆதரவு கண்டிப்பாக எங்களுக்கு தேவை. கணவர் கோபின் திடீர் இழப்பால் நாங்கள் முற்றிலுமாக உடைந்துவிட்டோம். அவர் என் குழந்தைகளுக்கு அற்புதமான தந்தை. என் மகள் கியானா அற்புதமாக மகள் மற்றும் நடாலியா, பியான்கா, காப்ரிக்கு ஒரு அன்பான சகோதரி.
அதே ஹெலிகாப்டர் விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் தற்போது அனுபவிக்கும் வலிகளை சொல்ல வார்த்தைகள் இல்லை. கோப் மற்றும் கியானா மக்களால் ஆழமாக நேசிக்கப்படுகிறார்கள் என்பது ஒன்றை நினைத்தே சற்று ஆறுதல் அடைகிறேன். எங்களிடம் இருந்த மிக அழகான ஆசீர்வாதங்கள் மிக விரைவில் பறிக்கப்பட்டுவிட்டன.
இனிமேல் எங்கள் வாழ்க்கை எப்படி இருக்குமென எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் கணவர் மற்றும் மகள் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. கோபின் கனவுகளுக்காக நாங்கள் தினமும் விழித்து நாளை முன்னோக்கித் தள்ள முயல்கிறோம். அவர்கள் மீதான எங்கள் அன்பு முடிவற்றது. இந்த புதிய எதார்த்தத்தில் நாங்கள் பயணிக்க எங்களுக்கான தனியுரிமையை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். உங்களுடைய பிரார்த்தனைகளால் எங்களை மீட்டதற்கு நன்றி” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
