‘பேஸ்புக்கில்’ இளைஞர்களிடம் ‘சிக்கிய’ ஆண்... போனில் பேசிய ‘பள்ளி’ மாணவன்... 5 பேராக சேர்ந்து... ‘சென்னையில்’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் போலி பேஸ்புக் அக்கவுண்ட் மூலமாக இளைஞரை ஏமாற்றி பணம், நகையைப் பறித்த கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த சண்முக சுந்தரம் (36) என்பவர் பேஸ்புக்கில் பெண் பெயரில் இயங்கிய அக்கவுண்ட் ஒன்றிற்கு ரிக்வஸ்ட் கொடுத்துள்ளார். அதை எதிர்முனையில் இருப்பவர் உடனே ஏற்றுக்கொண்டதும் அவர் மகிழ்ச்சியடைந்து அந்தப் பெண்ணிடம் தினமும் பேசி வந்துள்ளார். பின்னர் அவரிடம் செல்போன் எண்ணை வாங்கிய சண்முக சுந்தரம் அவருடன் மணிக்கணக்கில் பேசிவந்துள்ளார்.
இதையடுத்து அந்தப் பெண் அவரை நேரில் சந்திக்க வேண்டுமென சென்னைக்கு வருமாறு அழைக்க அவரும் கிளம்பிச் சென்றுள்ளார். கோயம்பேட்டில் இருந்து மாதவரம் வருமாறு கூறிய அந்தப் பெண், அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடம் ஒன்றில் அவரைக் காத்திருக்கச் சொல்லியுள்ளார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே அங்கு வந்த 5 இளைஞர்கள் சண்முக சுந்தரத்தை கத்தி முனையில் மிரட்டி, அவரிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் பணம், தங்கச் சங்கிலி, மோதிரம், ஸ்மார்ட் போன், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறித்துக்கொண்டு, ஏடிஎம் பின் நம்பரையும் வாங்கிக் கொண்டுள்ளனர். அதன்பிறகு அவர்களில் 3 பேர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பிச் சென்றுவிட, 2 பேர் சண்முக சுந்தரத்துடனேயே இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக போலீசார் வர, சண்முக சுந்தரம் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து சண்முக சுந்தரத்தை மீட்ட போலீசார், தப்பிச் செல்ல முயன்ற உடன் இருந்த 2 பேரையும் கைது செய்துள்ளனர். பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், யுவராஜ், சதீஸ், ஆதி, நவீன்குமார் எனும் 4 பேர் ஆண்களை ஏமாற்ற பேஸ்புக்கில் பெண் போல போலி அக்கவுண்ட் உருவாக்கி, 17 வயது சிறுவனைப் பெண் போல பேச வைத்து வழிப்பறி செய்து வந்தது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, நவீன்குமார் என்பவரும், 17 வயது பள்ளி மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தின்போது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்த சென்ற யுவராஜ், சதீஸ், ஆதி ஆகிய 3 பேரில் யுவராஜ், சதீஸ் இருவரும் விபத்தில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் தப்பியோடிய ஆதியைப் போலீசார் தேடி வருகின்றனர்.
