‘அடம்பிடித்தார்’ ‘ஆசையா 2 தோசை ஊட்டினேன்’.. தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்து கணவனை கொன்ற மனைவியின் பகீர் வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 16, 2019 03:08 PM

தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்து கணவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Chennai woman statement over husband\'s murder

சென்னையில் உள்ள புழல், புத்தகரம் பகுதியில் கறிக்கடையில் வேலை பார்த்து வந்தவர் சுரேஷ். இவரது மனைவி அனுப்பிரியா. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்து கணவனை கொலை செய்த வழக்கில் அனுப்பிரியா மற்றும் அவரது நண்பர் முரசொலிமாறன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில் கணவரை கொலை செய்தது குறித்து அனுப்பிரியா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், என் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் அருகே முகையூர். நான் பி.ஏ வரையில் படித்துள்ளேன். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு சுரேஷின் அண்ணனுக்கு எங்கள் ஊரில் திருமணம் நடந்தது. சுரேஷ் தூரத்து உறவினர் என்பதால் அந்த திருமணத்தில் கலந்து கொண்டேன். அப்போதுதான் சுரேஷை சந்தித்தேன்.

அப்போது எங்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி போனில் பேசி காதலை வளர்த்தோம். சுரேஷ் 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதால் எங்கள் வீட்டில் திருமணத்துக்கு மறுத்தனர். ஆனால் அடம்பிடித்து சுரேஷை திருமணம் செய்துகொண்டேன். அதன்பின் புழல், புத்தகரம் பகுதியில் உள்ள பெரியார் தெருவில் குடிவந்தோம். எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். எங்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டு இருந்தது.

இந்த சமயத்தில் நான் மெடிக்கல் ஷாப்புக்கு வேலைக்கு சென்றேன். இதனால் எனக்கு அடிக்கடி போன் வரும். இதனை சுரேஷ் சந்தேகப்பட்டு தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தினார். இது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. அப்போது பக்கத்துவீட்டுப் பையன் முரசொலிமாறன் எனக்கு ஆறுதலாக இருந்தார். நாங்கள் இருவரும் அக்கா, தம்பியாக பழகினோம். ஆனால் இதையும் சுரேஷ் சந்தேகப்பட்டு என்னை துன்புறுத்தினார்.

அதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து, வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது தூக்க மாத்திரைகளை எடுத்து வந்தேன். சம்பவத்தன்று சுரேஷ் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது குடிபோதையில் வந்தார். அவர் வரும்போது நான் போனில் பேசிக்கொண்டிருந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. என்னுடன் சண்டை போட்டுவிட்டு சுரேஷ் தூங்க சென்றார். அந்த சமயம் நான், ‘வெறும் வயிற்றில் தூங்காதீர்கள், தோசை சுட்டுக் கொடுக்கிறேன்’ எனக் கூறினேன். போதையில் இருந்ததால் சுரேஷ் வேண்டாம் என அடம் பிடித்தார். பின்னர் ஆசையாக அவருக்கு இரண்டு தோசைகளை ஊட்டிவிட்டேன். தோசை மாவில் கலந்த தூக்க மாத்திரை சுடும்போது வீரியம் குறைந்துவிடும் என எண்ணி, தோசை மீது பொடியாக தூக்கமாத்திரைகளை தூவினேன். தூக்க மாத்திரை கலந்த தோசை சாப்பிட்டதால் சுரேஷ் சீக்கிரமாக தூங்கிவிட்டார்.

உடனே முரசொலிமாறனுக்கு போன் செய்து வீட்டுக்கு வர சொன்னேன். அவனிடம் சுரேஷை கொலை செய்யப் போகும் தகவலை தெரிவித்தேன். ‘மாமா பாவம் விட்டுவிடு அக்கா’ என கூறினான். அவரால் தினமும் சித்ரவதை அனுபவிப்பதை விட சாவதேமேல் என அழுதபடி கூறி அவனை சம்மதிக்க வைத்தேன். பின்னர் சுரேஷ் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தேன். பின்னர் முரசொலிமாறன் அவனது வீட்டுக்கு சென்றுவிட்டான். காலையில் வழக்கம்போல வேலைக்கு போகும் கணவர் நீண்ட நேரமாகியும் எழுவில்லை என கூறி ஹவுஸ் ஓனரை வர வரவழைத்தேன். குடிபோதையில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டதாக அனைவரும் எண்ணினர். நானும் கதறி அழுது மற்றவர்களை நம்ப வைத்தேன். ஆனால் பிரேத பரிசோதனையில் கழுத்தில் காயம் இருந்ததை கண்டுபிடித்ததால் நான் சிக்கிக் கொண்டேன்’ என அனுப்பிரியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவர்களது 4 வயது குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்பா, அம்மா குறித்து குழந்தை கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Tags : #CHENNAI #WOMAN #STATEMENT #HUSBAND #MURDER #HYPNOTIC