‘தோசை மாவில் தூக்க மாத்திரை’ ‘கழுத்தில் காயம்’ சென்னையில் காதல் மனைவியால் கணவருக்கு நடந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 15, 2019 03:17 PM

தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்து காதல் கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wife murdered her husband near Puzhal in Chennai

சென்னை புழல் பகுதியில் சுரேஷ்-அனுப்பிரியா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் சுரேஷ் கறிக்கடையிலும், அனுப்பிரியா அப்பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப்பிலும் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கமாக கறிக்கடைக்கு வேலைக்கு செல்லும் சுரேஷ் நேற்று கடைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் கடை உரிமையாளர் வினோத்குமார் சுரேஷின் வீட்டுக்கு போன் செய்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாக யாரும் போனை எடுக்காமல் இருந்துள்ளனர்.

அப்போது திடீரென சுரேஷின் போனில் இருந்து பெண் ஒருவர், தான் ஹவுஸ் ஓனரின் மகள் என அறிமுகப்படுத்திக்கொண்டு பேசியுள்ளார். அவர் சுரேஷின் வீட்டுக்கு உடனே வரும்படி பதற்றத்தோடு தெரிவித்துள்ளார். இதனால் வினோத்குமார் வேகமாக சுரேஷின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டுக்கு வெளியே குழந்தையுடன் நின்ற சுரேஷின் மனைவி அனுப்பிரியா, இரவில் குடித்துவிட்டு வந்த சுரேஷ் தன்னிடம் தகராறு செய்துவிட்டு தங்களை வெளியில் தள்ளி படுக்கையறையில் தனியாக படுத்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது சுரேஷ் பேச்சுமூச்சு இல்லாமல் கிடந்துள்ளார். இதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சுரேஷை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 8 மணி வரை கடையில் நல்லபடியாக இருந்த சுரேஷ் திடீரென இறந்தது கறிக்கடை ஓனர் வினோத்குமாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சுரேஷின் கழுத்தில் காயம் இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அனுப்பிரியாவிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளனர்.இதனை அடுத்து சுரேஷை தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததாக அனுப்பிரியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த போலீசார், முரசொலிமாறன் என்பவருடன் அனுப்பிரியாவுக்கு பழக்கம் இருந்துள்ளது. இதுதொடர்பாக அனுப்பிரியாவுக்கும், சுரேஷுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுரேஷை கொலை செய்வது தொடர்பாக முரசொலிமாறனுடன் அனுப்பிரியா ஆலோசித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் வீட்டுக்கு மதுகுடித்துவிட்டு வந்துள்ளார். அப்போது தூக்க மாத்திரை கலந்த மாவில் தோசை சுட்டு கொடுத்துள்ளார். இதனால் சுரேஷ் நன்றாக தூங்கியுள்ளார்.

அந்த சமயம் முரசொலிமாறனுடன் சேர்ந்து சுரேஷின் கழுத்தை கயிறு மூலம் இறுக்கி அனுப்பிரியா கொலை செய்துள்ளார். இவை அனைத்தும் போலீசார் நடத்திய விசாரணை வெளிவந்துள்ளது. இந்நிலையில் அனுப்பிரியா மற்றும் முரசொலிமாறன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு சுரேஷ் மற்றும் அனுப்பிரியா காதலித்து திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags : #CHENNAI #WIFE #HUSBAND #KILLED