‘அப்பா சொல்லிக் கேக்காம இருக்க முடியல’.. ‘குழந்தைகளுடன் விஷம் சாப்பிட்ட மகள் வாக்குமூலம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 14, 2019 03:05 PM

சென்னையில் கடன் பிரச்சனை காரணமாக ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்றதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Chennai 4 of family commit suicide over debt 3 others survive

சென்னை திருமுல்லைவாயில்  பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (65). கட்டட கான்டிராக்டரான இவருடைய மனைவி சுப்பம்மாள் (60), மகன்கள் நாகராஜ் (35), ரவி (30), மகள்கள் முனியம்மாள், ஜோதி, கல்யாணி (25).  இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் மகள்களின் திருமணத்திற்காக வாங்கிய கடனால் கோவிந்தசாமிக்கு பொருளாதார நெருக்கடி இருந்து வந்துள்ளது.

இதன்காரணமாக அவருடைய 2 மருமகள்களும் வீட்டை விட்டு வெளியேறி தாய் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் கடன் சுமையோடு மன நிம்மதியில்லாமல் தவித்து வந்த கோவிந்தசாமி குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து 12ஆம் தேதி அவர் மனைவி, 2 மகன்கள், மகள் கல்யாணி மற்றும் அவருடைய 2 குழந்தைகள் சர்வேஸ்வரி (8), யோகலட்சுமி (6) ஆகியோருடன் விஷம் கலந்த உணவை சாப்பிட்டுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் அங்கு வந்த கல்யாணியின் கணவர் அனைவரும் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீஸாருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் ஏற்கெனவே இறந்திருந்த கோவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகியோரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கல்யாணி மற்றும் 2 குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதையடுத்து கல்யாணி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “எங்களுடைய திருமண செலவுகளுக்காகத்தான் அப்பா வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கியிருந்தார்.  சில வருடங்களாக வேலை இல்லாததால் கடன் தொகை அதிகமானது. எங்கள் வீட்டைப் பொறுத்தவரை அப்பா எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். அவருடைய முடிவுக்கு சம்மதிப்பவர்கள் விஷம் கலந்த உணவை சாப்பிடலாம் என சொல்லிவிட்டு அப்பா தான் முதலில் சாப்பிட்டார். அப்பா கூறியதாலேயே நானும் குழந்தைகளும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டோம்” எனக் கூறியுள்ளார்.

Tags : #CHENNAI #FAMILY #DEBT #SUICIDE #FATHER #DAUGHTER #KIDS #FOOD