'கரு கலைஞ்சு போச்சு'... 'கையிலிருந்த கைக்குழந்தை'... சென்னையை உறையவைத்த அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 06, 2020 12:11 PM

சென்னையில்  இளம்பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai : Woman and kid die after setting herself and kid on fire

சென்னை ராயப்பேட்டை பைலட் சந்து பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு நிகிதா என்ற ஒரு வயது குழந்தை ஒன்று உள்ளது. இந்த சூழ்நிலையில் லதா மீண்டும் கருவுற்றார். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு லதாவுக்கு திடீரென ரத்த போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது லதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் கரு கலைந்து விட்டதாக கூறியுள்ளனர். இது லதாவுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்துள்ளது. அதன்பின்னர் சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் லதா வீட்டிற்கு திரும்பி வந்தார். ஆனால் வீட்டிற்கு வந்த பின்பும் அவருக்கு தொடர்ந்து ரத்த போக்கு இருந்துள்ளது. இந்த சூழ்நிலையில் லதாவின் கணவர் வேலைக்கு சென்று விட, லதாவும் அவர்களின் ஒரு வயது குழந்தை நிகிதாவும் மட்டும் வீட்டில் இருந்தனர்.

இந்நிலையில் வீட்டில் இருந்த லதா என்ன நினைத்தாரோ, திடீரென நேற்று மதியம் ஒரு மணி அளவில் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டார். பின்னர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி அவர் தீ வைத்துக் கொண்டார். லதாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வீட்டின் கதவை தட்டினார்கள். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது லதாவும், அவரது குழந்தையும் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந் தது. இந்தநிலையில் குழந்தையும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தது. சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்கள்.

இதற்கிடையே கரு கலைந்ததால் லதா மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாக அவரது உறவினர்கள் கூறியுள்ளார்கள். கரு கலைந்த விரக்தியில் இருந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் தனது ஒரு வயது குழந்தையுடன் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தான் அதிர்ச்சியாகவும், குழப்பமாகவும் உள்ளது. எனவே லதாவின் தற்கொலைக்கு பின்பு வேறு காரணங்கள் எதுவும் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் லதாவுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகிறது என்பதால் இந்த வழக்கு ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இளம்பெண் தனது கைக்குழந்தையுடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #SUICIDEATTEMPT #CHENNAI #FIRE #KID