‘என் ஆண்ராய்டு போனையும் 200 ரூபாயும் வச்சிகிட்டு அத கொடுக்குறியா?’.. “ஊர்க்காரன்னு நம்புனதுக்கு வெச்சு செஞ்சுட்டான்!”.. கதறும் இளைஞர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 04, 2020 12:18 PM

சென்னை அண்ணா நகரில் தள்ளுவண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வருபவர் சேந்தன். கால் காசு வருமானம் என்றாலும் உழைத்து சம்பாதித்து வாழ்ந்து வந்துகொண்டிருந்துள்ளார் இவர். வடமாநிலத்தைச் சேர்ந்த சேந்தனிடம் அண்மையில் இவருடன் இவரைப் போலவே ஒரு வடமாநிலத்தவர் நெருங்கிப் பழகியுள்ளார். சேந்தனும், ‘ஹிந்தியில் பேசும் நம்மூர்க்காரர்’ என்று நம்பி அவருடன் பழகியுள்ளார்.

man from north cheats another man from north in chennai

ஒருநாள் தான் அவசரமாக சொந்த ஊருக்குச் செல்வதாகவும், அதற்காக தான் வைத்திருக்கும் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய ஸ்மார்ட்போனை விற்கவிருப்பதாகவும் சேந்தனின் நண்பர் கூற, அதைக் கேட்ட சேந்தனோ, ‘யாருக்கோ ஏன் விற்கிறாய்.. நான் என்னிடம் இருக்கும் 9 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆன்ராய்டு போனையும், கூட 200 ரூபாய் சேர்த்தும் தருகிறேன்’ என்று சொல்ல, அந்த நண்பரும் பெருந்தன்மையாக இந்த டீலுக்கு ஏதோ அரைமனதுடன்  ‘சரி உனக்காக தர்றேன்’ என்று ஒப்புக்கொண்டு விட்டு, தன்னிடம் இருந்த போனை போன் பாக்ஸில் வைத்து பார்சலாக தந்துவிட்டு சென்றுவிட்டார்.

சிறுபிள்ளைகள் போல புது போனை ஆசையாக பிரித்து பார்த்த சேந்தனுக்கு பார்சலில் இருந்தது போன் இல்லை கண்ணாடிக்கல் என்பது பேரதிர்ச்சியைத் தந்தது. இந்த ஏமாற்றத்துடன் அண்ணா நகர் போலீஸாரிடத்தில் சேந்தன் புகார் அளித்துள்ளார். அவர்கள் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து விசாரித்து வருகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாதவர்களை குறிவைத்தே இதுபோன்ற நூதன மோசடிகளை பலர் நடத்தி வருவதாக போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : #SMARTPHONE #CHENNAI #CHEAT #FRAUD