‘30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து’... ‘அந்தரத்தில் பறந்து கீழே தண்டவாளத்தில் விழுந்த பைக்’... 'அதிவேகத்தில் சென்ற'... 'சென்னை என்ஜீனியருக்கு நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 09, 2020 09:29 AM

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றபோது 30 அடி உயர பாலத்திலிருந்து தண்டவாளத்தில் விழுந்த என்ஜீனியர் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Speeding Engineer falls to death from Basin bridge

சென்னை வில்லிவாக்கத்தை அடுத்த ராஜமங்கலத்தை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் டேனியல் (23). செம்மஞ்சேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, தற்போது வேலை தேடிக்கொண்டிருந்தார். இவரது நண்பர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திக்(23). இவரும் அதே கல்லூரியில் படித்துவிட்டு, ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். லிவிங்ஸ்டன் டேனியல் வேலை விஷயமாக நண்பர் கார்த்திக்கை பார்க்கச் சென்று இருந்தார்.

பின்னர் இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை  இருசக்கர வாகனத்தில் புளியந்தோப்பு சென்று, அங்குள்ள ஒரு கடையில் பிரியாணி சாப்பிட்டு விட்டு மீண்டும் வண்ணாரப்பேட்டைக்கு அதிவேகமாக திரும்பி சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இருசக்கர வாகனத்தை லிவிங்ஸ்டன் ஓட்ட, கார்த்திக் பின்னால் அமர்ந்திருந்தார். பேசின் பாலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி திடீரென இருசக்கர வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல், சுமார் 30 அடி உயரம் உடைய அந்த பாலத்தின் ஓரம் இருந்த தடுப்புகளை இடித்தது. பின்னர் அந்தரத்தில் பறந்து கீழே பாய்ந்த இருசக்கர வாகனம் ரயில் தண்டவாளத்தில் விழுந்தது.

சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய லிவிங்ஸ்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் கார்த்திக் வலது கால் முறிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் இந்த விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், உயிருக்கு போராடிய கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் லிவிங்ஸ்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புவேலியை இடித்து கொண்டு கீழே விழுவதும், அதே நேரத்தில் அவர்கள் விழுந்த பகுதியில் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்வதும் பதிவாகியிருந்தது. இதையடுத்து விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை போலீசார் கிரேன் மூலம் மீட்டனர். விபத்து நடந்த பேசின் பாலத்தில் பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணி தற்போது நடந்து வருவதால், இதுபோன்ற விபத்துக்களை நடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : #ACCIDENT #JOBS #IT #CHENNAI #ENGINEER