'போற போக்குல வீசிக்கிட்டு போக முடியாது'... 'வீட்டு குப்பையை எடுக்கணுமா?... சென்னை மாநகராட்சி அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீடுகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில், குப்பை சேகரிப்பதற்கு கட்டணம் வசூலிக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்து, அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை மாநகராட்சி மூலம் மாநகர் முழுவதுமாக நாளொன்றுக்கு 5,249 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. மாநகராட்சியின் பணியாளர்கள் நாள் முழுவதும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பலர் குப்பைகளை குப்பை தொட்டிகளில் போடாமல், போகிற போக்கில் சாலையில் குப்பைகளை வீசிவிட்டு செல்வது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் வீடுகளில் குப்பை சேகரிக்கும் பணிக்காக கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி வீடுகளுக்கு மாதத்திற்கு குறைந்தபட்சம், 10 ரூபாய் முதல், அதிகபட்சமாக, 100 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதேபோல், திருமண மண்டபம், சமுதாய நலக்கூடங்களில், 1000 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரையும், உணவகங்களுக்கு 300 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோன்று அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், 300 ரூபாய் முதல், 3000 ரூபாய் வரையிலும், வணிக உரிம கடைகளில், 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலும் வசூலிக்கப்பட உள்ளது. இதே போல், திறந்த வெளியில் நடத்தப்படும் நிகழ்ச்சியின் அடிப்படையில், 5000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.