‘நொடியில் நடந்த விபரீதம்’.. ‘கிரிக்கெட் பந்துக்கு ஆசைப்பட்ட’.. ‘4ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Sep 11, 2019 01:30 PM
கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை அரசுப் பள்ளியில் மின்சாரம் பாய்ந்து 4ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புளியம்பாறை அரசு தொடக்கப்பள்ளியில் ஹரிஹரன் (9) என்ற மாணவர் 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு மதியம் 2.30 மணிக்கே பள்ளிக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் அனைவரும் வீட்டுக்குச் செல்ல ஹரிஹரன் மட்டும் பள்ளிக்கு அருகிலேயே நின்றுகொண்டிருந்துள்ளார்.
அந்தப் பள்ளியில் கிரிக்கெட் விளையாடும்போது மேற்கூரையில் மாட்டிக்கொள்ளும் பந்துகளை மேலே ஏறி எடுத்தால் ஆசிரியர்கள் திட்டுவார்கள் என மாணவர்கள் பயந்து அங்கேயே விட்டுச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் யாரும் இல்லாத நேரத்தில் மேற்கூரையில் சிக்கியிருந்த பந்தை எடுப்பதற்காக ஹரிஹரன் முயற்சித்துள்ளார். கூரை மீது ஏறியபோது தாழ்வாகச் சென்ற மின்கம்பி உரசியதில் ஹரிஹரன் கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு ஹரிஹரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள அப்பகுதியைச் சேர்ந்த சுக்ரீசன், “பள்ளிக் கட்டிடத்தின் மீது உயர் அழுத்த மின்கம்பி தாழ்வாகச் செல்வது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தின்மூலம் பொதுமக்களும் மின்வாரியத்துக்கு புகார் அளித்துள்ளோம். பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும் இதுபற்றி மின்வாரியத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் அலட்சியமாக இருந்ததாலேயே ஹரிஹரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்” எனக் கூறியுள்ளார். கிரிக்கெட் பந்துக்கு ஆசைப்பட்டு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.