பாதி 'இதுலயே' சரியாகிருச்சு... கொரோனாவை 'வென்று' டூட்டிக்கு திரும்பிய 'போலீஸ்' உருக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | May 18, 2020 05:58 PM

சென்னை காவல் துறையில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் ஒருவர் சிகிச்சை முடிந்து தற்போது மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். அவரை காவல்துறை ஆணையாளர் விஸ்வநாதன் வாழ்த்தி வரவேற்றார்.

Chennai Police affected with Corona recovered and join duty

சென்னையிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த எஸ்.ஐ அருணாச்சலம் என்பவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் 14 நாட்கள் சிகிச்சை பெற்றவர், பின்னர் வீட்டில் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். சிகிச்சை முடிந்து இன்று மீண்டும் பணியில் சேர்ந்த அவரை காவல்துறை ஆணையாளர் விஸ்வநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து எஸ்.ஐ அருணாச்சலம் கூறுகையில், 'கடந்த மாதம் பணியில் இருந்த போது கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். நான் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் என்னை மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் என்னை சிறப்பாக கவனித்து கொண்டனர். நான் குணமடைவதற்கு மிக முக்கிய காரணம், என்னுடைய உயர் அதிகாரிகளும், என்னுடன் பணியாற்றியவர்களும் என்னோடு உறுதுணையாக இருந்தது தான். அவர்களின் ஒத்துழைப்பிலேயே எனக்கு பாதி நோய் குணமாகியது. 28 நாட்கள் முழுமையான சிகிச்சைக்கு பின் மூன்று முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் வந்ததால் தற்போது பணியில் சேர்த்துள்ளேன்' என தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை காவல்துறை ஆணையர் கே.விஸ்வநாதன் கூறுகையில், 'கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 190 காவலர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பி பணிக்கு வரவேண்டுமென ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். கொரோனா பாதித்த காவலர்கள் மீது உடனடியாக அக்கறை செலுத்திய தமிழக முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகள், மருத்துவர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என தெரிவித்தார்.