20 வருஷத்துக்கு முன்ன... காணாம போன நகை 'திரும்ப' கெடைச்சிருக்கு... ஆனாலும் அதுல ஒரு ட்விஸ்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் இருபது ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன பெண்மணியின் தங்கம் திரும்ப கடிதம் ஒன்றுடன் கிடைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

காசர்கோடு மாவட்டம் நெல்லிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் பசாரியா. இரண்டு தினங்களுக்கு முன் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு மாலை நேரம் இஃப்தாருக்கான வேலைகளில் தனது வீட்டில் மும்முரமாக இருந்த நிலையில், ஒரு பெரிய உணவு பாக்சுடன் ஒருவர் வீட்டின் கதவை தட்டியுள்ளார். அப்போது சென்று பார்த்த பசாரியா, ஆச்சர்யமடைந்தார். அப்பகுதியில் இப்தார் உணவுகளை யாரும் அதிகமாக பரிமாறிக் கொள்வதில்லை.
இந்நிலையில், இதுகுறித்து ஹெல்மெட் அணிந்து வந்த அந்த நபரிடம் நீங்கள் யாரென பசாரியா விசாரித்துள்ளார். இதற்கு பதில் தெரிவித்த அந்த வாலிபர், இன்னொருவர் இதனை உங்களிடம் கொடுக்க சொன்னதாகவும் இதுகுறித்து வேறு எதுவும் எனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அந்த வாலிபரும் கிளம்ப, வீட்டிற்குள் சென்ற பசாரியா அந்த உணவு பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அதில், நெய் சோறு மற்றும் பீப் கறியுடன் ஒரு கடிதம் மற்றும் சிறிய நகை பெட்டியும் இருந்தது.
அந்த கடிதத்தில், 'இருபது ஆண்டுகளுக்கு முன் நீங்கள் தொலைத்த நகை ஒன்று என்னிடம் கிடைத்தது. ஆனால் அதனை உங்களிடம் நான் கொடுக்கவில்லை. தற்போது இந்த தங்க நாணயங்களை வாங்கி கொண்டு என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள்' என எழுதப்பட்டிருந்தது.
இருபது ஆண்டுகளுக்கு ஒரு திருமண விழாவிற்கு சென்ற போது பசாரியாவின் நகையின் ஒரு பகுதி தொலைந்துள்ளது. சுமார் 16 கிராம் தொலைந்து போன நிலையில் கல்யாண வீடு மொத்தமாக தேடியும் அது கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தை அந்த குடும்பமும் மறந்து வாழ்ந்து வரும் நிலையில் எதிர்பாராத நிலையில் கடிதத்துடன் வந்த தங்க நாணயம், அவர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
இதுகுறித்து பசாரியாவின் கணவர் இப்ராஹிம் கூறுகையில், '28 ஆண்டுகளாக செருப்புக் கடை ஒன்றை நான் நடத்தி வரும் நிலையில் தற்போது வியாபாரம் சற்று மந்தமாகவே செல்கிறது. இந்த கடினமான சூழ்நிலையில் வீடு தேடி வந்து அதை கொடுக்க நினைத்த நபருக்கு மிகப் பெரிய மனது வேண்டும். இது போன்ற மனிதரும் உலகில் இருக்க தான் செய்கிறார்கள்' என தெரிவித்துள்ளார்.
