‘விபத்தில்’ சிக்கிய பெண்ணை ‘மீட்க’ சென்றபோது ‘காத்திருந்த’ பயங்கரம்... ‘20 நாட்களாக’ தேடப்பட்டுவந்த ‘குடும்பத்திற்கு’ நேர்ந்த துயரம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 17, 2020 07:34 PM

20 நாட்களாக காணவில்லையென தேடப்பட்டு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கால்வாயில் கவிழ்ந்து கிடந்த காரிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

Accident Telangana MLAs Family Found Dead In River Canal

தெலங்கானா மாநிலத்தில் உள்ள பெத்தபள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோகர் ரெட்டி. அவருடைய தங்கை ராதிகா, தன்னுடைய கணவர் சத்தியநாராயணா மற்றும் மகள் சகஸ்ரா ஆகியோருடன் கடந்த மாதம் 27ஆம் தேதி பெத்தபள்ளியிலிருந்து கேரளாவுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார். அடுத்த நாள் மாலை உறவினர்கள்  அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, 3 பேருடைய செல்போன்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் காணவில்லை என குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல்போன 3 பேரையும் தீவிரமாகத் தேடிவந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை ஏற்பட்ட விபத்து ஒன்றில் இருசக்கர வாகனத்துடன் பெண் ஒருவர் கோதாவரி ஆற்றின் கால்வாயில் விழுந்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணை மீட்பதற்காக கால்வாய் திறக்கப்பட்டு அதிலிருந்த தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

அப்போது அந்தக் கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து கிடப்பதும், அதற்குள் 3 பேரின் உடல்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிரேன் மூலம் காரை மேலே தூக்கி பார்த்தபோது, காருக்குள் இருந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர் மனோகர் ரெட்டியின் குடும்பத்தினர்தான் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தெலங்கானா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் அவர்களுடைய மரணத்தை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #TELANGANA #ACCIDENT #MLA #FAMILY #CAR #CANAL