'அடுத்தடுத்து'... 'ஒன்றுடன் ஒன்று 5 வாகனங்கள் மோதியதால்'... 'சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்து’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதியதால், 5 ஓட்டுநர்கள் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் புறவழிச்சாலையில், அதாவது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அதிகாலை 4 மணியளவில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த மினி லாரி மீது பின்னால் அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து மோதியது. இதில் மினி லாரி தடுப்புச்சுவரை தாண்டி சென்று எதிர்திசையில் வந்த மற்றொரு மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சென்னையில் இருந்து திருச்சி சென்ற மினி லாரி மற்றும் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்ததுடன் பின்னால் வந்த ஆம்னி பேருந்தும் சேதமடைந்தது. இதில் 5 ஓட்டுநர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் செல்லாமல் மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டனர். பின்னர் 4 ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தீயணைப்பு துறையினர் கேஸ் டேங்கர் லாரி மீது நுரையையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற மீட்புப் பணிக்குப் பின்னர் டேங்கர் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு தற்போது சீராகியுள்ளது.