‘ஓலா, உபர் கார் புக்கிங்கின்’... ‘கேன்சல் அபராதத் தொகையில் வரும் மாற்றம்’... ‘வெளியான புதிய தகவல்’!
முகப்பு > செய்திகள் > வணிகம்By Sangeetha | Nov 28, 2019 01:50 PM
ஓலா, உபர் போன்ற வாடகை கார் நிறுவனங்களை நெறிப்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை மத்திய அரசு தீட்டி வருகிறது.
மத்திய அரசு முதல்முறையாக இந்தத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதன்படி, பீக் அவர் நேரங்களில், வழக்கமான கட்டணத்தை விட 4 முதல் 5 மடங்குகள் வரை கூட ஓலா, உபர் நிறுவனங்கள் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கிறது. புதிய விதிகளின் படி, அதிகபட்சமாக அடிப்படை கட்டணத்தில் இருந்து 2 மடங்கு மட்டுமே வசூலிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கார் புக்கிங்கை கேன்சல் செய்யும் பயணிகளுக்கு, 10 முதல் 50 சதவிகிதம் வரையில், அதிகபட்சமாக 100 ரூபாய் வரை மட்டுமே அபராதம் விதிக்கும் வகையில், விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளன.
இதேபோல் ஓட்டுநர்கள், வாடிக்கையாளர்களின் புக்கிங்கை தன்னிச்சையாக கேன்சல் செய்தால், அதிகபட்சமாக 100 ரூபாய் வரை, அவர்களிடம் இருந்து ஓலா, உபர் நிறுவனங்கள் அபராதம் வசூலித்துக் கொள்ளலாம். மேலும் ஒரு வாரத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் புக்கிங்கை கேன்சல் செய்தால், 2 நாட்களுக்கு அந்த ஓட்டுநருக்கு புக்கிங் கொடுப்பதை ஓலா, உபர் நிறுவனங்கள் நிறுத்தி வைக்க முடியும்.
மேலும் வாடகை கார்களில் பயணிப்பவர்கள் செலுத்தும் கட்டணத்தில், ஓலா, உபர் போன்ற நிறுவனங்களின் கமிஷன் அளவு 20 சதவிகிதமாக உள்ளது. புதிய விதிகளின் படி, 10 சதவிகிதத்திற்குள் மட்டுமே ஓலா, உபர் நிறுவனங்கள் கமிசன் பெற இயலும். மீதி 90 சதவிகிதம் கட்டணப் பணம், ஓட்டுநர்களுக்கு கிடைக்கும்.
3 மணி நேரத்திற்கு ஒரு முறை பயோமெட்ரிக்ஸ் அல்லது ஃபேசியல் ரெகக்னிசன் முறையில் ஓட்டுநரின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். எல்லா பயணிகளுக்கும் 5 லட்ச ரூபாய் வரை காப்பீடு போன்ற விதிகளும் கட்டாயமாக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் வரைவு பொதுமக்களின் கருத்துக்காக அடுத்தவாரம் வெளியிடப்பட்டு, பின்னர், நடைமுறைக்கு வருகிறது.