‘குடும்பத்துடன் கோயிலுக்கு போனபோது’... ‘நொடியில் நடந்த கோர சம்பவம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 13, 2019 08:25 PM
குடும்பத்துடன் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, நடந்த கோர விபத்து, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்தவர்கள் பாக்கியராஜ் (55) - வெண்ணிலா தம்பதியினர். இவர்களது மகன் ஸ்டாலின் (35). வேளாங்கண்ணி கோயிலுக்கு செல்ல நினைத்து, அதனபடி 3 பேரும் இன்று காலை காரில் புறப்பட்டனர். காரை மகன் ஸ்டாலின் ஓட்டிவந்தநிலையில், அறந்தாங்கி அருகே கூத்தன்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணமேல்குடியில் இருந்து அறந்தாங்கி நோக்கி, இருசக்கர வாகனத்தில் நடேசன் (35) என்பவர் வந்துகொண்டிருந்தார்.
திடீரென காரும், இருசக்கர வாகனமும் மோதியதில், நிலைதடுமாறிய கார் தாறுமாறாக ஓடி , சாலையோரமுள்ள மரத்தில் இடித்தது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கி, முன்பக்கம் அமர்ந்திருந்த பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் ஸ்டாலின் மற்றும் அவரது தாய் வெண்ணிலா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த நடேசன் தூக்கி வீசப்பட்டு, அவரது கால் துண்டானது. இது குறித்த தகவல் அறிந்து வந்த அறந்தாங்கி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், காருக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் பாக்கியராஜை மீட்க முடியவில்லை. இதனால் காயமடைந்த தாய் மற்றும் மகனை மட்டும் மீட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். படுகாயமடைந்த நடேசனையும் மீட்டு அனுப்பி வைத்தனர். காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரிழந்த பாக்கியராஜ் உடலை, சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பின்னர் மீட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.