LONG DRIVE போலாமா? பொண்டாட்டியை நடுக்காட்டில் மறந்து விட்டுவிட்டு 150 கிமீ போன கஜினிகாந்த்.! யாருயா அவரு.?!
முகப்பு > செய்திகள் > உலகம்தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் காரில் இருந்து மனைவி இறங்கியது கூட தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு கிளம்ப, பல கிலோமீட்டர் சென்ற பிறகுதான் அவருக்கு விபரம் தெரியவந்திருக்கிறது. அதன்பிறகு போலீசார் உதவியுடன் தனது மனைவியை கண்டுபிடித்திருக்கிறார் அந்த நபர்.
தாய்லாந்தை சேர்ந்த பூண்டோம் சாய்மூன் (வயது 55), மற்றும் அவரது மனைவி அம்னுவாய் சாய்மூன் (வயது 49), ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைக் கழிக்க பேங்காக் சென்றிருக்கின்றனர் இருவரும். அதன்பிறகு தனது சொந்த ஊரான மஹா சரகம் மாகாணத்திற்கு இருவரும் காரில் திரும்பியுள்ளனர். நீண்ட கார் பயணத்தின் போது ஆங்காங்கே நிறுத்தி ஓய்வெடுத்து இருவரும் தங்களது பயணத்தை தொடர்ந்திருக்கின்றனர்.
இந்நிலையில், அதிகாலை 3 மணியளவில் பூண்டோம் சாய்மூன் காரை ஓட்டும்போது இயற்கை உபாதைக்காக வாகனத்தை நிறுத்தியிருக்கிறார். அப்போது அவரது மனைவியும் காரில் இருந்து கீழே இறங்கி உள்ளார். ஆனால், பூண்டோம் சாய்மூன் மறதி காரணமாக கீழே இறங்கிய தனது மனைவி மீண்டும் காரில் ஏறினாரா? என்பதை கவனிக்காமல் காரை எடுத்துக்கொண்டு தனது பயணத்தை தொடர்ந்திருக்கிறார்.
சற்று நேரத்தில் காரையும் கணவரையும் காணாததால் அம்னுவாய் சாய்மூன் மிகுந்த அச்சமடைந்திருக்கிறார். அவரை தொடர்புகொள்ளவும் முடியாததால் நடந்து செல்வது என தீர்மானித்திருக்கிறார். அப்படி சுமார் 20 கிலோமீட்டர் அம்னுவாய் சாய்மூன் நடந்து கபின் புரி மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தினை அடைந்திருக்கிறார். அங்கு இருந்த அதிகாரிகளிடம் விஷயத்தை அம்னுவாய் சாய்மூன் கூற, அதிகாரிகளே ஒருநிமிஷம் அதிர்ந்து போய்விட்டனர்.
இதனையடுத்து பூண்டோம் சாய்மூனை தொடர்புகொள்ள காவல்துறை அதிகாரிகள் முயற்சித்திருக்கின்றனர். அதன் பலனாக காலை 8 மணியளவில் அவரை போலீசார் தொடர்புகொண்டிருக்கின்றனர். அப்போது அவர் 150 கிலோமீட்டர் தாண்டி வந்த பிறகுதான் காரில் மனைவியை காணவில்லை என்பதை தெரிந்துகொண்டதாக போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து தனது மனைவியிடம் அவர் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். இதனையடுத்து போலீசார் விசாரணையிலும் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது அவரது மனைவி தனது கணவருக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாக காவல்துறையினரிடத்தில் தெரிவித்திருக்கிறார். இருவருக்கும் திருமணமாகி 27 வருடங்கள் ஆகிவிட்டதாகவும் தங்களுக்கு 26 வயதில் மகன் ஒருவர் இருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகளிடத்தில் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.