'திடீரென எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு'...'கட்டுப்பாட்டை இழந்த பேருந்து'...17 பேரை காவு வாங்கிய கோரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Nov 05, 2019 04:12 PM

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Death toll in Nepal bus accident rises to 17

நேபாள நாட்டின் டோலாகா மாவட்டத்தில் இருந்து தலை நகர் காத்மாண்டுவுக்கு நேற்று முன்தினம் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பேருந்தில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தை உள்பட 70-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். சிந்துபால்சவுக் பகுதியில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

பெரும் விபரீதம் நடக்க போவதை உணர்ந்த பயணிகள் அதிர்ச்சியில் கதறி துடிந்தனர். அப்போது சாலையில் இருந்து விலகி 165 அடி ஆழத்தில் உள்ள சன்கோஷி ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்தது. ஆற்றில் ஆழம் அதிகமாக இருந்ததால் பஸ் நீரில் மூழ்கியது. இதனிடையே விபத்தை நேரில் பார்த்த மக்கள் விரைந்து சென்று, தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் மீட்பு படகுகளில் பஸ்சுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனிடையே விபத்தில் சிக்கிய  3 மாத பச்சிளம் குழந்தை மற்றும் 6 சிறுவர்கள் உள்பட 15 பேரின் உடல்கள் முதலில் மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேலும் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. மேலும் படுகாயங்களுடன் 56 பேர் மீட்கப்பட்டனர். மேலும் ஆற்றுக்குள் பஸ் விழுந்து விபத்துக்குள்ளானதில் சிலர் மாயமாகி இருக்கிறார்கள். அவர்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது ''சாலையில் பேருந்து வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென பயணிகளின் அலறல் சத்தம் மட்டும் கேட்டது. அதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது என அவர்கள் கூறினார்கள். இதனிடையே கடந்த மாதம் தலைநகர் காத்மாண்டுவுக்கு அருகே அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி சென்ற பஸ், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Tags : #ACCIDENT #BUS ACCIDENT #NEPAL #DEATH TOLL #SINDHUPALCHOWK DISTRICT