'ஒரு லட்ச ரூபாய் கடன்'...'வெத்து பத்திரத்துல கைநாட்டு'...நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Dec 21, 2019 03:54 PM
ஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டதோடு, இளைஞர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே சிறுதொண்டநல்லூர் மறைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது. பெயிண்டிங் வேலைகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வரும் இவர், ஆழ்வார்திருநகரியில் வட்டித் தொழில் செய்யும் கண்ணன் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடனாக வாங்கியிருக்கிறார். பெயிண்டிங் ஒப்பந்தம் போட்ட இடத்தில் சாகுல்ஹமீதிற்கு வர வேண்டிய பணம் வரவில்லை.
இந்நிலையில் வட்டிக்கு பணம் வாங்கிய நிலையில், வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமல் சாகுல்ஹமீது தவித்துள்ளார். அவருக்கு பணம் கொடுத்த கண்ணன், பலமுறை கேட்டும் வட்டிப்பணம் வராத நிலையில், தனது ஆதரவாளர்கள் 6பேருடன் சேர்ந்து சாகுல் ஹமீதை கடந்த 17ம் தேதி காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே கடத்தி செல்ல பட்ட சாகுல் ஹமீதை அறையில் அடைத்து வைத்து, வட்டிக்கு வட்டிபோட்டு 3 மடங்கு பணம் கேட்டு அவரை அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து காயங்களுடன் அவரை வீட்டில் கொண்டு வந்து விட்ட கண்ணன் தலைமையிலான கும்பல், அவரை மிரட்டி வெற்றுப் பத்திரத்தில் விரல் ரேகை வாங்கிக் கொண்டு சென்றது.
இந்நிலையில் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சாகுல் ஹமீது சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார், கந்துவட்டி கும்பலை சேர்ந்த இருவரை கைது செய்ததுடன் கண்ணன் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
கந்துவட்டிக் கொடுமையில் இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.