இளைஞரை ‘அடித்து’ ஏற்றிச் சென்று... ‘ஆட்டோ’ ஓட்டுநர்கள் செய்த ‘நடுங்க’ வைக்கும் காரியம்... ‘வயலில்’ சடலமாகக் கிடந்த கொடூரம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Dec 17, 2019 01:51 PM
கேரளாவில் திருடியதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் சேர்ந்து இளைஞர் ஒருவரை கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த திருவல்லம் பகுதியில் உள்ள வயலில் இளைஞர் ஒருவர் கிடப்பதாகவும், அவரை நாய்கள் கடித்துக் குதறிக்கொண்டிருப்பதாவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்து சென்று அந்த இளைஞரை மீட்ட போலீசார் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இறந்து கிடந்த இளைஞரின் கால் உடைந்திருப்பதாகவும், பிறப்புறுப்பில் சூடு வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதில் பல அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தில் இறந்து கிடந்த நபரின் பெயர் அஜீஸ் என்பதும், அவரை திருடியதாகக் கூறி 5 பேர் அடித்துக் கொன்றதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள போலீசார், “கடந்த வியாழக்கிழமை மலப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் தூங்கியுள்ளார். பின்னர் எழுந்தபோது அவர் தனது செல்ஃபோன், பர்ஸ் ஆகியவை காணாமல் போயுள்ளதைப் பாத்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து அங்கு அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் இதுகுறித்து கூறிய அவர் திருடிய நபரின் அடையாளங்கள் பற்றியும் கூறியுள்ளார். அதைக் கேட்ட அவர்கள் அந்த நபரைத் தங்களுக்குத் தெரியும் எனக் கூறியுள்ளனர். அதன்பிறகு 3 ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட 5 பேர் சேர்ந்து முட்டக்காடு பகுதியைச் சேர்ந்த அஜீஸ் என்பவரைத் தாக்கி ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர். பின்னர் திருவல்லம் பகுதியில் ஒரு வீட்டில் வைத்து அவரை அடித்து திருட்டைப் பற்றி விசாரித்துள்ளனர். அப்போது கத்தியை நெருப்பில் பழுக்கவைத்து அவருடைய பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ளனர்.
பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த இளைஞரை வயல்வெளியில் தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அஜீஸை அவர்கள் அடித்து ஆட்டோவில் ஏற்றிச் சென்றதை அங்கிருந்த சிலர் மொபைலில் வீடியோவாக எடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உணவுப் பொருளைத் திருடியதாக, வயநாட்டைச் சேர்ந்த மது என்ற ஆதிவாசி இளைஞரை சிலர் அடித்துக் கொன்றதைப் போலவே மீண்டும் ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.