'ஸ்கூல்' படிக்கும் போது காதல்'...'திடீரென நடந்த சந்திப்பு'...'பள்ளி காதலிக்காக' கணவன் செய்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 20, 2019 09:34 AM

பள்ளி காதலியுடன் சேர்ந்து கணவரே, மனைவியை கொலை செய்த சம்பவத்தில், பெண்ணின் உடல் மீண்டும் தோண்டி பிரதே பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Drishyam model murder: Kerala Police Exhume body found in Valliyur

நெல்லை மாவட்டம் வள்ளியூர்-ஏர்வாடி மெயின் ரோடு அருகே உள்ள முட்புதரில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக வள்ளியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் சென்றனர். அங்கு இறந்து கிடந்த பெண் மஞ்சள் நிற சுடிதார் அணிந்து இருந்தார். அது தவிர வேறு எந்த தடயங்களும் அங்கு இல்லை.

யார் கொலை செய்தார்கள், அந்த பெண் எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்? போன்ற விவரங்கள் தெரியாததால் இந்த வழக்கில் சிக்கல் நீடித்து வந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரின் உடல் வள்ளியூர் பெரியகுளம் கரை அருகே புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தனது மனைவி வித்யாவை காணவில்லை என்று, அங்குள்ள உதயம்பேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து இருந்தார். அதன்பேரில் வித்யாவின் செல்போன் எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். அப்போது அவரது செல்போன் சிக்னல் கடைசியாக திருவனந்தபுரம் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

ஆனால் அதே நேரத்தில் பிரேம்குமாரின் செல்போன் சிக்னலும் அங்கு இருந்தது. இது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் நெல்லை காவல்துறை சார்பில் வள்ளியூரில் இறந்து கிடந்த பெண் குறித்த விவரங்கள் அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அதனை ஆய்வு செய்த கேரள காவல்துறையினர், அங்கு இறந்து கிடந்த பெண் வித்யா என்பதை போலீசார் உறுதிசெய்தனர். பின்னர் இந்த வழக்கை கேரள போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கேரள போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலில், பிரேம்குமார், சுனிதாபேபி என்ற பெண்ணுடன் திருவனந்தபுரத்தில் வசித்து வருவது தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் பிரேம்குமார், சுனிதாபேபி ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்தன.

அதில், ''கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரேம் குமார் படித்த பள்ளியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பள்ளியில் படிக்கும் காலத்தில் தான் காதலித்த சுனிதாபேபியை, பிரேம் குமார் சந்தித்தார். இருவருக்கும் திருமணம் ஆன நிலையில், மீண்டும் சந்தித்த போது இருவருக்கும் இடையே மீண்டும் காதல் மலர்ந்து.

ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் விவகாரம் பிரேம் குமாரின் மனைவி வித்யாவுக்கு தெரியவந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து வித்யாவை கொலை செய்ய சுனிதா பேபியும், பிரேம் குமாரும் திட்டமிட்டார்கள். அதன்படி பிரேம்குமார், சுனிதாபேபியுடன் சேர்ந்து வித்யாவை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜிக்கு அழைத்து சென்றனர். அங்கு வித்யாவுக்கு கட்டாயமாக மது கொடுக்கப்பட்டு,  2 பேரும் சேர்ந்து வித்யாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர்.

பின்னர் அவரது உடலை பிரேம்குமார் தனது காரில் ஏற்றிக் கொண்டு நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கு வந்து ஒரு முட்புதரில் வீசிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து வித்யாவின் உடல் வள்ளியூரில் புதைக்கப்பட்டதால் வழக்கு விசாரணைக்காக மீண்டும் மறுபிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்காக நேற்று பிரேம்குமார், சுனிதாபேபி ஆகியோரை வள்ளியூருக்கு அழைத்து வந்த கேரள காவல்துறையினர், வள்ளியூர் பெரிய குளக்கரையில் புதைக்கப்பட்ட வித்யாவின் உடலை ராதாபுரம் தாசில்தார் முன்னிலையில் தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர்.

பள்ளி காதலிக்காக மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KERALA #MURDER #KILLED #POLICE #UDAYAMPEROOR POLICE #DRISHYAM #VALLIYUR