'ஒரு வயசுல குழந்தை இருக்கு'...'சபரிமலைக்கு போக இருந்த பையன்'...'இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 16, 2019 04:45 PM

திருமணமாகி 2 வருடங்களே ஆன நிலையில், இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newly Married youth brutally killed in Arakkonam

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், நன்னுமீரான்சாயபு தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் பிரவீன். 24 வயது இளைஞரான இவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரியங்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு வயதில் தியாபிரசி என்ற பெண் குழந்தை இருக்கிறது. டீக்கடை வைத்து தொழில் செய்து வரும் பிரவீன், சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 7.45 மணி அளவில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள ஒரு கடை முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் ஓடி வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், பிரவீனின் தலை, வயிறு, கை என உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொடூர கொலையை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். அந்த பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன. இதனால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தகவல் அறிந்த பிரவீனின் உறவினர்கள், நண்பர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனை முன்பாக குவிந்தனர். ஆகவே போலீசார் பிரவீனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே கொலை நடந்த பகுதியில் உள்ள கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், அதில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். பிரவீன் எதற்காக கொலை செய்யப்பட்டார்?, முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளார்கள்.

Tags : #MURDER #KILLED #ARAKKONAM #VELLORE #YOUTH